61 நாட்கள் அமலில் இருக்கும் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது, மீன்கள் விலை உயர வாய்ப்பு


61 நாட்கள் அமலில் இருக்கும் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது, மீன்கள் விலை உயர வாய்ப்பு
x
தினத்தந்தி 15 April 2018 11:00 PM GMT (Updated: 15 April 2018 8:15 PM GMT)

வங்கக்கடலில் மீன்பிடி தடைக்காலம் நேற்று தொடங்கியது. 61 நாட்கள் அமலில் இருக்கும் இந்த தடைக்காலத்தில் மீன்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையிலான 61 நாட்கள் மீன்களுக்கான இனப்பெருக்க காலமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த காலக்கட்டத்தில் வங்கக்கடலில் மீன்கள் வளர்ச்சியை எதிர்நோக்கும் வகையில், ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த காலத்தில் மீனவர்கள் கரையோர பகுதிகளில் மட்டுமே மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இக்காலத்தில் அரசு சார்பில் மீனவர்களுக்கு நிவாரண உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. எனவே கடலுக்கு செல்லாத இக்காலகட்டங்களில் வலைகள் பின்னுதல், படகு சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபடுவதை பார்க்கலாம்.

அந்தவகையில் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் காரம்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி வரையிலான வங்கக்கடல் எல்லைகளில் நேற்று முதல் இந்த மீன்பிடி தடை அமலுக்கு வந்தது. இதனால் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க நேற்று செல்லவில்லை. தடைக்காலம் என்பதால் மீனவர்கள் தங்களது பைபர் மற்றும் விசைப்படகுகளை கடல் எல்லைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் சென்னை காசிமேடு, கடலூர், நாகை, ராமேசுவரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, முட்டம் உள்ளிட்ட முக்கிய துறைமுகங்களில் நேற்று ஆயிரக்கணக்கான படகுகள் நிறுத்தப்பட்டு இருந்தன. கடற்கரையோரங்களில் வலை பின்னுதல், அறுந்த வலைகளை சீரமைத்தல், படகுகளை சீரமைத்தல் போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்லமாட்டார்கள் என்பதால், மீன்கள் விலை உயரும் என்று கருதப்படுகிறது. இதனால் தடைக்காலங்களில் மக்கள் தேவையை கருத்தில்கொண்டு வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அந்தவகையில் மீன்கள் விலை வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும். குறிப்பாக மக்கள் அதிகம் விரும்பும் வஞ்சிரம் உள்ளிட்ட மீன்கள் விலை எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் நாட்களில் அரசு அறிவித்துள்ள உதவித்தொகை போதுமானதாக இல்லை என்றும், இந்த தொகை உயர்த்தி தரவேண்டும் என்று மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

இதுகுறித்து அகில இந்திய மீனவர் சங்க செயல் தலைவர் நாஞ்சில் ரவி கூறியதாவது:-

மீன்பிடி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு கோடி பேர் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டின் ஒட்டு மொத்த வருவாயில் ரூ.60 ஆயிரம் கோடி அளவில் அன்னிய செலாவணி ஈட்டும் தொழில் மீன்பிடி தொழில் ஆகும். இந்தநிலையில் மீன் இனப்பெருக்கத்துக்காக 61 நாட்கள் தடைக்காலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த காலத்தில் ஒவ்வொரு மீனவ குடும்பத்துக்கும் தலா ரூ.5 ஆயிரம் உதவித்தொகையாக அரசு அறிவித்துள்ளது. இதனை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும். விசைப்படகு பராமரிப்புக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். கோடை காலத்தில் மீன்இனப்பெருக்கம் இருக்காது. எனவே மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அக்டோபர்-டிசம்பர் இடையிலான காலகட்டத்தில் அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story