சசிகலா புஷ்பா எம்.பி. கணவர் புகாரின்பேரில் சத்யபிரியாவை கைது செய்வதற்காக டெல்லி போலீசார் மதுரை வருகை


சசிகலா புஷ்பா எம்.பி. கணவர் புகாரின்பேரில் சத்யபிரியாவை கைது செய்வதற்காக டெல்லி போலீசார் மதுரை வருகை
x
தினத்தந்தி 15 April 2018 11:00 PM GMT (Updated: 15 April 2018 8:29 PM GMT)

சசிகலா புஷ்பா எம்.பி.யின் கணவர் ராமசாமி கொடுத்த புகாரின்பேரில் சத்ய பிரியாவையும், அவரது சகோதரர் மணிகண்டனையும் கைது செய்வதற்காக டெல்லி போலீசார் மதுரைக்கு வந்துள்ளனர்.

மதுரை,

மதுரை கீரைத்துறை புதுமாகாளிப்பட்டியை சேர்ந்தவர் சத்யபிரியா (வயது 24). இவர் கடந்த மாதம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், ராமசாமி என்பவர் நீதிபதி என்று தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், பெண் குழந்தை பிறந்த பிறகு தன்னை விட்டுச்சென்று விட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் சசிகலா புஷ்பா எம்.பி.க்கும், தனது கணவர் ராமசாமிக்கும் இடையே திருமணம் நடக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் சசிகலா புஷ்பா, ராமசாமி ஆகியோரின் திருமணத்துக்கு மதுரை மாவட்ட கோர்ட்டு தடை விதித்தது. ஆனாலும் சசிகலா புஷ்பா, ராமசாமி திருமணம் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் சத்யபிரியா மீதும், அவரது சகோதரர் மணிகண்டன் மீதும் ராமசாமி டெல்லி போலீசில் புகார் அளித்திருந்தார். அதில் தனது முதல் மனைவியின் மகளை, சத்யபிரியாவும், அவரது சகோதரர் மணிகண்டனும் கொடுமைப்படுத்தியதாக கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில் சத்யபிரியா மற்றும் அவரது சகோதரர் மணிகண்டன் மீது டெல்லி வடக்கு அவென்யூ போலீசார், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 26-ந் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து சத்யபிரியா, மணிகண்டனை கைது செய்வதற்காக, டெல்லி வடக்கு அவென்யூ போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்பால் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் மதுரைக்கு வந்துள்ளனர். அவர்கள் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி பெற்று விட்டு நேற்று மாலை சத்யபிரியாவின் வீட்டுக்கு சென்றனர். அங்கு சத்யபிரியாவின் வீடு பூட்டப்பட்டிருந்ததை அடுத்து அவரது வீட்டின் முன்பு டெல்லி வடக்கு அவென்யூ போலீஸ் நிலையத்தில் ஏப்ரல் 24-ந்தேதி நடைபெற உள்ள விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை அடங்கிய நோட்டீசை ஒட்டினர்.

டெல்லி போலீஸ் வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கீரைத்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார், கீரைத்துறை போலீஸ் நிலையத்திற்கு சென்று சத்யபிரியா குடும்பத்தினர் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டனர். சத்யபிரியா, சகோதரர் மணிகண்டனை கைது செய்யும் வரை டெல்லி போலீசார் மதுரையில் தங்கியிருக்க திட்டமிட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

Next Story