மதுரை அருகே நடந்த ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் வாலிபர் சாவு


மதுரை அருகே நடந்த ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 16 April 2018 4:15 AM IST (Updated: 16 April 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே உள்ள குலமங்கலத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 668 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடு முட்டியதில் போட்டியை பார்க்க சென்ற வாலிபர் உயிரிழந்தார்.

அலங்காநல்லூர்,

மதுரை குலமங்கலத்தில் உள்ள ஸ்ரீராவுத்தம்பட்டி கருப்புசாமி, முனியாண்டி கோவில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதற்காக கோவில் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. போட்டியில் கலந்து கொள்வதற்காக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர்.

காலை 8.30 மணி அளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை கோட்டாட்சியர் அரவிந்தன் தலைமையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன் பிறகு, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடும் வகையில் சீறிப் பாய்ந்தன.

காளைகளுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்ற எண்ணத்தில் மாடுபிடி வீரர்களும் காளைகளை பிடித்தனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் செல்போன், சைக்கிள்கள், பட்டுச் சேலைகள், பாத்திரங்கள், பீரோ, கட்டில் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை 3.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. மொத்தம் 668 காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. 450 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிப்பதற்காக மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வந்து குவிந்து இருந்தனர்.

இதனிடையே காளை முட்டியதில் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொய்கைகரைப்பட்டியை சேர்ந்த பாலு (வயது 37) என்பவர் உயிரிழந்தார். இதேபோல், காளைகள் முட்டியதில் 60 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 9 பேர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 

Next Story