தண்ணீர் வரத்து குறைந்ததால் ‘சிற்றோடையாக’ மாறிய காவிரி ஆறு


தண்ணீர் வரத்து குறைந்ததால் ‘சிற்றோடையாக’ மாறிய காவிரி ஆறு
x
தினத்தந்தி 16 April 2018 4:15 AM IST (Updated: 16 April 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்ததால், அகன்ற காவிரி ஆறு தற்போது ‘சிற்றோடை‘ போன்று மாறி காட்சி அளிக்கிறது.

கொளத்தூர்,

திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களின் நீர் ஆதாரமாக, உயிர்நாடியாக மேட்டூர் அணை விளங்கி வருகிறது. இங்கு தேக்கி வைக்கப்படும் நீரை நம்பி பல்வேறு மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் முப்போக சாகுபடி நடந்து வந்தது. கர்நாடகாவில் இருந்து ஓடி வரும் காவிரி ஆற்றில், தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருகிறது.

இந்த நிலையில் பருவமழை பொய்த்ததாலும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய உரிய நீரை வழங்காததாலும் தொடர்ந்து சில ஆண்டுகளாக கோடை காலத்தில் மேட்டூர் அணை வறண்டது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வறுமைக்கு தள்ளப்பட்ட நிலைமை ஏற்பட்டது.

தண்ணீர் வரத்து குறைந்தது

தற்போது நடப்பாண்டிலும் பருவமழை பொய்த்து போனதாலும், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 500 கனஅடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 35.87 அடியாக குறைந்து விட்டது. அணைக்கு வினாடிக்கு 49 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததாலும், பாலாறு போன்ற துணை நதிகளும் வறண்டு போனதாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து பெருமளவு குறைந்து விட்டது.

அகன்ற காவிரி

இதன் காரணமாக அகன்று பரந்து விரிந்து காணப்பட்ட காவிரி ஆறு தற்போது சிற்றோடை போன்று சோகமயமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக பண்ணவாடி நீர் தேக்கப்பகுதியில் காவிரி ஆற்றில் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் ஓடுகிறது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி, மேட்டூர் அணையை குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ள சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் பண்ணவாடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் ஆற்றில் சிறிதளவே தண்ணீர் ஓடுவதை கண்டு ஏமாற்றம் அடைந்துள்ளனர். கன மழை பெய்து, காவிரி ஆற்றில் தண்ணீர் எப்போது பெருக்கெடுத்து ஓடும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story