சேலம் ஜங்சன் வழியாக செல்லும் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்


சேலம் ஜங்சன் வழியாக செல்லும் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 16 April 2018 4:15 AM IST (Updated: 16 April 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

சேலம் ஜங்சன் வழியாக செல்லும் ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சூரமங்கலம்,

இது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் ரெயில்நிலையம் அருகே உள்ள போடி நாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி, அண்ணாநகர் பகுதிகளை சேலம் நகரத்துடன் இணைக்கும் சிறிய நீர்வழிப்பாலத்தை மாற்றி, பெரிய தரை கீழ்பாலமாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நீர்வழிப்பாதை மழைநீர் வடிகாலுக்கு அமைக்கப்பட்டு இருந்தாலும் பொதுமக்கள் அதை ரெயில் தடத்தை கீழே கடக்க பயன் படுத்தி வந்துள்ளனர்.

ஆனாலும், மழை காலத்தில் அங்கே பெருமளவு நீர் தேங்குவதால், அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதுடன், ரெயில்தடத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த சிறுபாலம் சேலம் ரெயில்நிலையத்தின் மிக அருகில் 1 கி.மீ. தூரத்தில் இருப்பதால், பெருமளவு ரெயில் இயக்கம் பாதிக்கப்படும் காரணத்தால், இதனை இடித்து அகலப்படுத்தும் அல்லது மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட இயலவில்லை.

போடிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி, அண்ணா நகர் பகுதிகளில் வசிக்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன் பெறும் வகையில், இந்த பகுதிகளை சேலம் நகரத்துடன் இணைக்கும் வகையிலும், சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, பன்னீர்செல்வம் எம்.பி. ஒத்துழைப்புடன், தெற்கு ரெயில்வே தலைமையக அதிகாரி களுடன் கலந்தாலோசித்தார். பின்னர் அவர், அந்த இடத்தில் பஸ், லாரி போன்ற பெரிய வாகனங்கள் கூட வந்து செல்லும் அளவுக்கு ஒரு பெரிய தரை கீழ்பாலத்தை கட்ட பணிகளை இன்று (திங்கட் கிழமை) தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த பெரிய அளவிலான மெகா பிளாக் என்றழைக்கப்படும் பணிகளால், பயணிகள் ரெயில்களின் இயக்கம் இன்று முதல் வருகிற 20-ந் தேதி வரை பெரும் மாற்றங்களுக்கு உள்ளாவதுடன், சரக்கு ரெயில்களின் இயக்கம் இன்று மற்றும் 20-ந் தேதி முழுமையாக நிறுத்தப்படும். இந்த காலக்கட்டத்தில் 26 கான்கிரீட் கூடுகள் செய்யப்பட்டு ரெயில்தடத்தின் கீழ் நிறுவப்பட உள்ளன.

இந்த பணிகள் நடைபெறுவதன் மூலம் சுமார் 50 ஆண்டுகளாக வைக்கப்பட்டு வந்த போடிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி, அண்ணாநகர் பகுதி மக்களின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டு, அப்பகுதியை சேலம் நகரத்துடன் இணைக்க உதவும். இந்த தரை கீழ்பாலப் பணிகள் ரூ.2.83 கோடி திட்ட மதிப்பீட்டில், பன்னீர்செல்வம் எம்.பி., வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மற்றும் தமிழக அரசு, சேலம் மாநகராட்சியின் நிதி பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது 

Next Story