ஓமலூர் அருகே கல்லூரி மாணவி கடத்தல்; கொத்தனார் கைது


ஓமலூர் அருகே கல்லூரி மாணவி கடத்தல்; கொத்தனார் கைது
x
தினத்தந்தி 16 April 2018 3:45 AM IST (Updated: 16 April 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே கல்லூரி மாணவியை கடத்தியதாக கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர்,

ஓமலூரை அடுத்த ஊ.மாரமங்கலம் ஊராட்சி பனங்காடு பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. இவருடைய மகன் முருகன் (வயது 23), கொத்தனார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடந்த 8-ந் தேதி இரவு கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த மாணவியின் தாயார், ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி விசாரணை மேற்கொண்டு, முருகனை தேடி வந்தார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த முருகனை பிடித்த போலீசார், கடத்தப்பட்ட மாணவியையும் மீட்டனர்.

கைது

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், கொத்தனார் முருகனை, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகன், மற்றும் மீட்கப்பட்ட மாணவியை ஓமலூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில் முருகன் ஓமலூர் கிளை சிறையில் அடைக்கப் பட்டார். 

Next Story