ஆண்டிப்பட்டி அருகே வியாபாரி வீட்டில் 51 பவுன் நகை திருட்டு
ஆண்டிப்பட்டி அருகே வியாபாரி வீட்டில் 51 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டியை அடுத்த க.விலக்கு அருகே உள்ள பிஸ்மிநகரை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 37). இவர், தனது வீட்டின் அருகில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அவருடைய வீட்டுக்கு இருபுறமும் வாசல் உள்ளது. நேற்று முன்தினம் இரவு சந்திரமோகன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டின் பின்புற கதவை பூட்டுவதற்கு அவர்கள் மறந்து விட்டனர். இந்தநிலையில் நள்ளிரவு நேரத்தில் பின்புற வாசல் வழியாக நுழைந்த மர்ம நபர்கள், வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டில் இருந்த பீரோவிலேயே சாவியும் இருந்தது. அந்த சாவியால், பீரோவை திறந்து அதில் இருந்த 51 பவுன் நகை, 800 கிராம் வெள்ளி மற்றும் 11 ஆயிரத்து 500 ரூபாயை திருடிவிட்டு சென்று விட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் எழுந்த சந்திரமோகனின் மனைவி மஞ்சுளாதேவி, பீரோ திறந்து கிடப்பதையும் அதில் இருந்த நகைகள் திருட்டு போய் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து க.விலக்கு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் ஆண்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதேபோல் மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மோப்பம் பிடித்த நாய், வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இந்த திருட்டு சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தால் பிஸ்மிநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story