டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ஜி.அரியூரில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
திருக்கோவிலூர் தாலுகா ஜி.அரியூர் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களில் குறிப்பிட்ட சிலரை கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர்.
அப்போது அவர்கள், கலெக்டர் சுப்பிரமணியனிடம் கூறுகையில், எங்கள் கிராமத்தில் இயங்கி வரும் 2 டாஸ்மாக் கடைகளால் தினமும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. நாங்கள் அத்தியாவசிய தேவைக்காக கடைவீதிகளுக்கு செல்ல வேண்டுமெனில் இந்த டாஸ்மாக் கடைகளை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. அதுபோல் காடியார், மேமாளூர், துலாம்பூண்டி, ஆளூர், மொகலார், பழங்கூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஜி.அரியூர் பள்ளிக்கு இந்த டாஸ்மாக் கடைகளை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு செல்லும் போது சில குடிபிரியர்கள் தகராறு செய்து ஆபாசமாக பேசுவதால் மாணவ-மாணவிகள் அச்சமடைகின்றனர். எனவே பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடுவதற்கு தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதை கேட்டறிந்த கலெக்டர் சுப்பிரமணியன், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story