கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி


கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 17 April 2018 3:45 AM IST (Updated: 16 April 2018 11:34 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர், 

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனால் ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

இதில் நொச்சிக்காடை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரும் தனது குடும்பத்துடன் மனு கொடுக்க வந்திருந்தார். அங்கு அவர்கள் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தங்கபாண்டியனின் சகோதரி மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை தங்கபாண்டியன் எடுத்தார். உடனே அவரது தந்தை வீரராகவன் பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி தனது தலையில் பெட்ரோலை ஊற்றினார். அடுத்தடுத்து அந்த பாட்டிலை வாங்கி தங்கபாண்டியனும், அவரது சகோதரிகளும் பெட்ரோலை தங்களது உடலிலும், தங்களது குழந்தைகள் மீதும் ஊற்றினார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேரும் தீக்குளிக்க முயன்றதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதறினர். பின்னர் அவர்களிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை சிலர் போராடி பறித்தனர்.

இதற்கிடையே சற்றும் எதிர்பாராதவிதமாக வீரராகவன் தீக்குளிக்க தீப்பெட்டியை எடுத்தார். அப்போது அங்கிருந்தவர்களும், போலீசாரும் தீப்பெட்டியை பறித்தனர்.

இந்த சம்பவத்தில் பெட்ரோல் உடலில் பட்டதால் குழந்தைகள் கதறி அழுதனர். அந்த குழந்தைகள் மீது போலீசார் தண்ணீரை ஊற்றினார்கள். தொடர்ந்து மற்றவர்கள் மீதும் போலீசார் தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து அவர்களை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் போலீசார் அழைத்து சென்றனர். மாவட்ட வருவாய் அதிகாரி விஜயாவிடம், தங்கபாண்டியன் மனைவி செந்தமிழ் செல்வி மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

16 பேர் கொண்ட எனது குடும்ப உறுப்பினர்களுடன் நான் எங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் வசித்து வருகிறோம். அந்த வீட்டுக்கு செல்லும் வழி புறம்போக்கு நிலத்தில் உள்ளது. அதனை ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளார். நேற்று நான் அந்த வழியாக சென்ற போது, அவரும், அவரது தாயாரும் என்னை தடுத்து நிறுத்தி, அசிங்கமான வார்த்தைகளால் திட்டி தாக்கினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, புறம்போக்குநிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் தெரிவித்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story