சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
x
தினத்தந்தி 17 April 2018 3:30 AM IST (Updated: 17 April 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம், 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தண்டபாணி, பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் திருவள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைவேந்தர் மணியன் வரவேற்றார். விழாவுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மலரை வெளியிட, அதனை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பெற்றுக் கொண்டார்.

தமிழக அரசியல் வரலாற்றில் நட்சத்திர அடையாளமாக விளங்குபவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சராக, மாபெரும் மக்கள் இயக்கத்தின் தலைவராக, மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற திரைப்பட நடிகராக, ஏழை ஏளியவர்களின் வறுமையினை துடைக்கும் வள்ளலாக, அண்ணாவின் இதயக்கனியாக விளங்கிய பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. உயர்கல்வித்துறையில் அரசு பல்வேறு சாதனைகளை செய்து, உயர்கல்வித்துறையில் இந்தியாவின் சராசரி வளர்ச்சியைவிடவும் கூடுதலான வளர்ச்சியினை அடைந்து வருகிறது.

விழா மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் எம்.ஜி.ஆரின் பன்முக ஆளுமையினை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை. மக்கள் நலன் ஒன்றை மட்டுமே உயிராக கொண்டு செயலாற்றி புரட்சித்தலைவரின் ஆளுமையினை அறிந்து கொள்வதோடு, நின்றுவிடாமல் அவர் காட்டிய தூய வழியில் நாமும் நடைபோட வேண்டும் என்று உறுதி ஏற்கும் விழாவாகவும் இந்த விழா அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்ந்து நூற்றாண்டு விழாவையொட்டி பல்கலைக்கழக மாணவ-மாணவிகளிடையே நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, இசை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.

விழாவில் சிதம்பரம் தொகுதி எம்.பி. சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் சிதம்பரம் பாண்டியன், காட்டுமன்னார்கோவில் முருகுமாறன், பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் கலைமணி, செல்விராமஜெயம், பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர் உமா மகேசுவரன், தமிழ் துறை தலைவர் அரங்க.பாரி உள்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பதிவாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Next Story