கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் அம்பேத்கர் பட பேனருக்கு தீ வைப்பு
கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் அம்பேத்கர் பட பேனருக்கு தீ வைக்கப்பட்டது. இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கணியம்பாடி
கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 14-ந் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேனரை மின்கம்பத்தில் கட்டி வைத்திருந்தனர்.
இந்த பேனரை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் பேனரின் ஒரு பகுதி எரிந்து விட்டது.
இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கண்ணமங்கலம் காலனி, கீழ்பள்ளிப்பட்டு காலனி மற்றும் கீழ்வல்லம் காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் பேனரை ரோட்டின் குறுக்கே போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பேனரை எரித்தவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகராஜன் மற்றும் போலீசார், கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் ரேவதி, வல்லம் கிராம நிர்வாக அலுவவர் ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர்.
பேனருக்கு தீ வைத்தது தொடர்பாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் தீ வைக்கப்பட்ட பேனரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் காரணமாக நேற்று காலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story