பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட முயற்சி


பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 16 April 2018 10:00 PM GMT (Updated: 16 April 2018 7:26 PM GMT)

பெரியகுளத்தில் உள்ள துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆதிதமிழர் பேரவையினர்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பெரியகுளம், 

ஆதிதமிழர் பேரவை சார்பில், தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வன்கொடுமை சட்டத்தை செயல் இழக்கச்செய்யும் மத்திய அரசை கண்டிக்காத அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் தமிழக அரசை கண்டித்து, பெரியகுளத்தில் உள்ள துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ஆதித்தமிழர் பேரவையினர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், ஆதிதமிழர் பேரவையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, வீட்டை முற்றுகையிட முயன்ற 49 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி 2 திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story