கொலையில் இருந்து வயதான தம்பதியினர் தப்பினர்: செல்போன் உதவியால் கொள்ளை கும்பல் சிக்கியது, 6 பேர் கைது


கொலையில் இருந்து வயதான தம்பதியினர் தப்பினர்: செல்போன் உதவியால் கொள்ளை கும்பல் சிக்கியது, 6 பேர் கைது
x
தினத்தந்தி 17 April 2018 5:00 AM IST (Updated: 17 April 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் செல்போன் உதவியால் கொலை-கொள்ளை கும்பல் சிக்கியது. போலீசாரின் அதிரடியால் வயதான தம்பதியினர் கொலையில் இருந்து தப்பினர். கொள்ளையர்கள் 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

பூந்தமல்லி,

மதுரவாயல், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு-பகல் நேரங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்கள், ஆண்கள் மற்றும் வயதானவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வந்தது. இதுபற்றி போலீசில் புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இதைத்தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர்.

தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க கோயம்பேடு உதவி கமிஷனர் ஜான்சுந்தர் உத்தரவின் பேரில் மதுரவாயல் இன்ஸ்பெக்டர்கள் ஈஸ்வரன், தீபக்குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் செல்லதுரை, சுதாகர் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

தனிப்படை போலீசார் வழிப்பறி சம்பவம் நடைபெற்ற இடங்களில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அதில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த நபர்கள் மற்றும் அவர்கள் வந்த ஒரு மோட்டார் சைக்கிள்களின் நம்பரை வைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த மோட்டார் சைக்கிள் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி கவாஸ்கர் என்ற குரு (வயது 32) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவனது செல்போன் எண்ணை போலீசார் பெற்று, அவன் இருக்கும் இடத்தை செல்போன் கோபுரம் மூலம் கண்காணித்தனர். அப்போது சென்னை, மணலி, மாத்தூர், ராகவன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அவன் பதுங்கியிருப்பதை அங்குள்ள செல்போன் கோபுரம் காட்டியது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள வீட்டில் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் வெளியே செல்ல தயாராக இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீசாரைக் கண்டதும் அவர்கள் தப்பியோட முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொள்ளை கும்பல் வில்லிவாக்கத்தில் வீட்டில் தனியாக உள்ள வயதான தம்பதியினரை கொலை செய்து விட்டு கொள்ளை அடிப்பதற்காக புறப்பட்டபோது போலீசில் சிக்கியது அம்பலமானது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளியான கவாஸ்கர் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி. இவர் மீது 6 கொலை முயற்சி, 20-க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் உள்ளது. அங்கு ரவுடிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த சில மாதங்களாக சென்னையில் தங்கி உள்ளார்.

இங்கு முருகேசன் (43), செல்வம் (48), முத்து என்ற கோட்டைமுத்து (21), மணி என்ற மணிகண்டன் (24), உதயகுமார் (32) ஆகியோரை கூட்டு சேர்த்துக்கொண்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களை குறி வைத்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகை பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மேலும் சிறிய அளவில் திருட்டில் ஈடுபட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆக முடியாது என்பதால் பெரிய அளவில் கொள்ளை சம்பவத்தை நடத்த அவர்கள் திட்டம் தீட்டி உள்ளனர். அதற்கு இந்த குழுவில் கார் டிரைவராக இருந்து வந்த செல்வம், தான் டிரைவர் வேலைக்கு செல்லும் இடத்தில் வசதியான வீட்டில் தனியாக வயதானவர்கள் இருக்கிறார்களா? என்பதை நோட்டமிட்டு வந்துள்ளார்.

அப்போது தான் வில்லிவாக்கத்தில் வசதியான வீட்டில் வயதான ஒரு தம்பதியினர் மட்டும் தனியாக இருந்துள்ளது அவர்களுக்கு தெரியவந்தது. அவர்களது பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளனர். எனவே இந்த வீட்டில் புகுந்து வயதான தம்பதியை கொலை செய்து விட்டு நகை, பணத்தை கொள்ளை அடிக்க அந்த கும்பல் திட்டம் தீட்டி அதற்காக புறப்பட தயாரானபோது தான் எங்களிடம் அவர்கள் சிக்கி உள்ளனர்.

கார் டிரைவரான செல்வம் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கு உள்ளது. அந்த வழக்கில் இருந்து சமீபத்தில்தான் சிறையில் இருந்து வெளியே வந்து உள்ளார்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்தும் பயங்கர ஆயுதங்கள், 14 பவுன் நகைகள், 1 கார், 1 மொபெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சரியான நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதால் வயதான தம்பதியினரை அவர்கள் கொலை செய்ய திட்டமிட்டது தவிர்க்கப்பட்டுள்ளது என்றும், பெரிய அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கப்பட்டுள்ளது என்றும் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story