இடஒதுக்கீடு இருந்தால்தான் பாகுபாடின்றி அனைத்து சமுதாய மக்களும் முன்னேற்றம் அடைய வழி கிடைக்கும்


இடஒதுக்கீடு இருந்தால்தான் பாகுபாடின்றி அனைத்து சமுதாய மக்களும் முன்னேற்றம் அடைய வழி கிடைக்கும்
x
தினத்தந்தி 17 April 2018 4:30 AM IST (Updated: 17 April 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

இடஒதுக்கீடு இருந்தால்தான் பாகுபாடின்றி அனைத்து சமுதாய மக்களும் முன்னேற்றம் அடைய வழி கிடைக்கும் என்று மத்திய பிரதேச எம்.பி. வினய் சகஸ்ரபுத்தே கூறினார்.

திருச்சி,

திருச்சியில் தமிழ்நாடு இளம் சிந்தனையாளர் மன்றம் சார்பில் சமுதாய ஒருமைப்பாட்டிற்கான கருத்தரங்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மத்திய பிரதேச மாநில ராஜ்யசபா எம்.பி. வினய் சகஸ்ரபுத்தே ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள், சுனாமியால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளை பராமரித்து வரும் கடலூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன், நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியும், சமூக ஆர்வலருமான சுவேதா, தாவரவியல் ஆராய்ச்சி துறையில் சாதனை படைத்து வரும் பேராசிரியர் உமாதேவி, பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை கற்று கொடுத்து வரும் சென்னை ஆட்டோ டிரைவர் சேகர், கடல் சார்ந்த விளையாட்டில் அசத்தி வருகிற மூர்த்திமேகவன் ஆகியோருக்கு “ராமானுச்சாரியா-அம்பேத்கர் விருதினை” வழங்கி பாராட்டினர்.

மேலும் வாழ்நாள் சாதனையாளர் விருது சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த கக்கனுக்கு வழங்கப்பட்டது. அந்த விருதை அவருடைய 2-வது மகன் பாக்கியநாதன் மற்றும் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி பேசுகையில், உலக மக்கள் தொகையில் 2-ம் இடம் வகிக்கும் இந்தியாவில் கலாசாரம், பண்பாடு, மொழி உள்ளிட்டவற்றில் நாம் வேறுபட்டிருந்தாலும் இந்தியன் என்பதில் ஒற்றுமையுணர்வோடு இருக்கிறோம். நமது சமூகத்தில் பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வே இல்லை என்கிற நிலை வருகிற போது தான், பல்வேறு பாகுபாடுகள் ஒழியும், என்று கூறினார்.

வினய் சகஸ்ரபுத்தே எம்.பி பேசுகையில், இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு இன்றியமையாத ஒன்று ஆகும். அது இருந்தால் தான் பாகு பாடின்றி அனைத்து சமுதாய மக்களும் முன்னேற்றம் அடைவதற்கான வழி கிடைக்கும். அந்த வகையில் ராமானுச்சாரியாரும், அம்பேத்கரும் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் பாடுபட்டனர். அவர்கள் வழியில் இளைய தலைமுறையினரும் சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டும், என்றார். 

Next Story