குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 17 April 2018 4:15 AM IST (Updated: 17 April 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் வெண்ணமுத்துப்பட்டியில் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு மனுக்களை பெற்று கொண்டார். கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம், செட்டிப்பட்டி ஊராட்சி வெண்ணமுத்துப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊரில் உள்ள பெரியகுளத்தை நம்பி பல ஏக்கர் பரப்பில் விளைநிலங்கள் உள்ளன. இந்நிலையில் ஊரத்திப்பட்டி, காயம்பட்டி, கண்ணாங்குடி கிராமத்தை சேர்ந்த சிலர் பெரிய குளத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் இப்பகுதியில் மழை பெய்தால் பெரியகுளத்தில் உள்ள தண்ணீர் வெளியே வரமுடியாத நிலை ஏற்படும். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, பெரியகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

லஞ்சம்

கந்தர்வகோட்டை அருகே உள்ள புனல்குளத்தை சேர்ந்த ஒருவர் கொடுத்த மனுவில், எனது வீட்டிற்கு மேல்புறத்தில் உள்ள காலி மனைக்கு பட்டா கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன். ஆனால் அதற்கு பட்டா வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த மனுவில் கூறியிருந்தார்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கணேஷ் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

Next Story