பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 April 2018 4:30 AM IST (Updated: 17 April 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக புறநகர் கிளை அலுவலகம் முன் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர் சம்மேளனம், ஏ.ஐ.டி.யு.சி, தொ.மு.ச. ஆகியவற்றை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கூட்டமைப்பு தலைவர் மருதமுத்து தலைமை தாங்கினார்.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் ஓய்வூதியத்தை வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். 2 ஆண்டுக்கு மேலாக வழங்கப்படாத பஞ்சப்படி உயர்வை இனியும் காலம் தாழ்த்தாமல் நிலுவையுடன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊதிய ஒப்பந்த பலன்களை ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் முழுவதையும் உடனே வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான வாரிசு நியமனம் வழங்க வேண்டும். ஓய்வூதிய திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி தொழிற்சங்க தலைவர்கள் மணி, ஏகாம்பரம், வரதராஜன் ஆகியோர் பேசினார்கள். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மே மாதம் 10-ந்தேதி சென்னையில் மாநில அளவில் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற இருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 

Next Story