சொத்துவரி ரூ.1 கோடி செலுத்தாததால் பி.எஸ்.என்.எல். அலுவலகம்- குடியிருப்புக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு


சொத்துவரி ரூ.1 கோடி செலுத்தாததால் பி.எஸ்.என்.எல். அலுவலகம்- குடியிருப்புக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு
x
தினத்தந்தி 16 April 2018 10:45 PM GMT (Updated: 2018-04-17T02:44:42+05:30)

நாகர்கோவில் நகராட்சிக்கு சொத்துவரி ரூ.1 கோடி செலுத்தாததால் பி.எஸ்.என்.எல். அலுவலகம் மற்றும் குடியிருப்புக்கு குடிநீர் இணைப்பை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகமும், வாட்டர் டேங்க் ரோட்டில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையமும் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு பின்புறம் பி.எஸ்.என்.எல். குடியிருப்பு உள்ளது.

இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். நிர்வாகம், நாகர்கோவில் நகராட்சிக்கு சொத்து வரி ரூ.1 கோடி செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நகராட்சி வருவாய் அதிகாரி குமார்சிங் தலைமையில், சுகாதார ஆய்வாளர் பகவதிபெருமாள், வருவாய் ஆய்வாளர்கள் சுப்பையன், முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம், வாடிக்கையாளர்கள் சேவை மையம் மற்றும் குடியிருப்புக்கு நேரில் சென்றனர்.

பின்னர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கான நகராட்சி குடிநீர் இணைப்பை துண்டித்தனர். மேலும் கழிவுநீர் வெளியேற்றமும் அடைக்கப்பட்டது.

இதுபற்றி நகராட்சி வருவாய் அதிகாரி குமார்சிங் கூறியதாவது:-

பி.எஸ்.என்.எல். நிர்வாகம் நாகர்கோவில் நகராட்சிக்கு 2 கோடி ரூபாய் சொத்து வரி செலுத்த வேண்டி இருந்தது. இதில் ஒரு கோடி ரூபாயை கடந்த 3 மாதங்களுக்கு முன் செலுத்திவிட்டனர். ஆனால் மீதமுள்ள ஒரு கோடி ரூபாய் இன்னும் செலுத்தப்படவில்லை. இதற்கிடையே மீதமுள்ள வரியை செலுத்துவது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் 3 வாரங்களுக்குள் வரி செலுத்தவில்லை எனில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. கோர்ட்டு வழங்கிய 3 வார கால அவகாசம் முடிவடைந்ததைத் தொடர்ந்தும் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் பாக்கி வரியை செலுத்தவில்லை.

எனவே பி.எஸ்.என்.எல். அலுவலகம், வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் குடியிருப்புக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டிக்கவும், கழிவு நீரை நகராட்சிக்கு சொந்தமான சாக்கடை கால்வாயில் கலக்கவிடாமல் அடைக்கவும் நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டார். அதன்பேரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story