வறட்சியால் பருத்தி பயிர்கள் பாதிப்பு விவசாயிகள் கவலை


வறட்சியால் பருத்தி பயிர்கள் பாதிப்பு விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 17 April 2018 4:00 AM IST (Updated: 17 April 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

பெருகவாழ்ந்தான் பகுதியில் வறட்சியால் பருத்தி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பெருகவாழ்ந்தான்,

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை நெல் சாகுபடி கடந்த 7 ஆண்டுகளாக முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடியிலும் எதிர்பார்த்த அளவு மகசூல் இல்லாததால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.

நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் பகுதியில் விவசாயிகள் உளுந்து, எள், பயறு, கடலை, பருத்தி பயிர்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பெருகவாழ்ந்தான், சேந்தமங்கலம், ஆலாத்தூர், இருள்நீக்கி, விக்கிரபாண்டியம், பனையூர், தோட்டம், ஓவர்சேரி, புழுதிக்குடி, திருவண்டுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு 400 ஏக்கருக்கும் அதிகமாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வறட்சி

பெருகவாழ்ந்தான் பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. கோடை வெயிலும் சுட்டெரித்து வருகிறது. இதனால் பருத்தி பயிர்கள் போதிய வளர்ச்சி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

காவிரி நதி நீர் பிரச்சினையால் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. பெருகவாழ்ந்தான் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பருத்தி சாகுபடியை செய்து வருகிறோம். பருத்தி பயிருக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது என்பதால் கோடை காலத்தில் பருத்தியை சாகுபடி செய்கிறோம்.

மானியத்தில் விதைகள்

120 நாட்களில் இருந்து 140 நாட்களுக்குள் பருத்தியை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரம் வரை செலவாகிறது. இந்த ஆண்டு நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக பருத்தி பயிரில் போதிய அளவு வளர்ச்சி இல்லை. இதனால் மகசூல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நெல் சாகுபடி பலனளிக்காத நிலையில் பருத்தி சாகுபடியிலும் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. பருத்தி சாகுபடியை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு பருத்தி விதைகளை 50 சதவீத மானிய விலையில் வழங்கவும், இடுபொருட்களை இலவசமாக வழங்கவும் வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர். 

Next Story