பாதாமி தொகுதியில் போட்டியிடுகிறேன் என நான் கூறவில்லை; முதல்-மந்திரி சித்தராமையா


பாதாமி தொகுதியில் போட்டியிடுகிறேன் என நான் கூறவில்லை; முதல்-மந்திரி சித்தராமையா
x
தினத்தந்தி 17 April 2018 5:00 AM IST (Updated: 17 April 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

பாதாமி தொகுதியில் போட்டியிடுகிறேன் என நான் கூறவில்லை என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

மைசூரு,

முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்துக்கு வந்தார். அவர் மண்டஹள்ளி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா தோல்வி அடைவார் என்று குமாரசாமி கூறுகிறார். சாமுண்டீஸ்வரி தொகுதி மக்களின் ஓட்டுகள் குமாரசாமியின் பாக்கெட்டில் உள்ளதா?. அதனால் அப்படி சொல்கிறாரா?. குமாரசாமியை தோற்கடிக்க நான் வாரக்கணக்கில் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஓரிரு நாட்கள் நான் பிரசாரம் செய்தாலே, குமாரசாமி தோல்வி அடைந்து விடுவார்.

வீரப்ப மொய்லியை எதிர்த்து போட்டியிட்ட அனிதா குமாரசாமி தோல்வி அடைந்தபோது, குமாரசாமி எங்கே போயிருந்தார். வெற்றி, தோல்வி என்பது குமாரசாமி முடிவு செய்தால் வந்துவிடாது. அதனை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சாமுண்டீஸ்வரி தொகுதியில் என்னை தோற்கடிக்க குமாரசாமி பரபரப்பாக பிரசாரம் செய்து வருகிறார்.

கடந்த 2006-ம் ஆண்டு சாமுண்டீஸ்வரி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் என்னை தோற்கடிக்க பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டன. அப்போதே நான் தான் வெற்றி பெற்றேன். இந்த தேர்தலிலும் இதேபோன்று தான் நடக்கும். சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் என்று நான் கூறவில்லை. அதிலும் பாதாமி தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று எனது வாயில் வந்ததே இல்லை. சாமுண்டீஸ்வரி தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதாக கூறியிருந்தேன். நான் பாதாமி தொகுதியில் போட்டியிட மாட்டேன். சாமுண்டீஸ்வரி தொகுதியில் மட்டுமே போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதிக்குட்பட்ட மகாதேவபுரா, ஸ்ரீராமபுரா, ராமாபாய் நகர், கொப்பாலு, கொரூர் ஆகிய கிராமங்களுக்கு காரில் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அவருடன் மந்திரி மகாதேவப்பா, துருவநாராயண் எம்.பி., கொள்ளேகால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் சென்று பிரசாரம் செய்தனர். சித்தராமையா மைசூருவில் 4 நாட்கள் தங்கி இருந்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

Next Story