சேலம் கோட்டம் விரைவில் இந்திய ரெயில்வேயின் தலை சிறந்ததாக விளங்கும்; ஹரிசங்கர் வர்மா
சேலம் கோட்டம் விரைவில் இந்திய ரெயில்வேயின் தலை சிறந்ததாக விளங்கும் என ரெயில்வே வாரவிழாவில் மேலாளர் ஹரிசங்கர் வர்மா பேசினார்.
சூரமங்கலம்,
தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அலுவலகம் அருகே உள்ள கலையரங்கத்தில் 63-வது ரெயில்வே வாரவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கோட்ட ரெயில்வே மகளிர்நல அமைப்பின் தலைவர் அனிதா வர்மா, முதுநிலை கோட்ட ஒருங்கிணைப்பு பொறியாளர் பெருமாள் நந்தலால், பணியாளர் நலஅதிகாரி திருமுருகன், முதுநிலை நிதிஆலோசகர் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட கூடுதல் மேலாளர் சந்திரபால் வரவேற்றார்.
விழாவில் ரெயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தலைமை தாங்கி பேசியதாவாது:- சேலம் ரெயில்வே கோட்டம் விரைவில் இந்திய ரெயில்வேயின் தலைசிறந்த கோட்டமாக விளங்கும். ஏற்காட்டில் தற்போது புதியதாக ஊழியர் ஓய்வு இல்லம் கட்டப்பட்டுள்ளது. சேலம் மற்றும் ஊட்டியில் ஊழியர் இல்லங்களின் அறைகள் விரிவு படுத்தப்படும். தெற்கு ரெயில்வே மகளிர் நலஅமைப்பு சேலம் மற்றும் ஈரோட்டில் உள்ள ரெயில்வே பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளனர்.
தொடர்ந்து சேலம் கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 14 துறைகளுக்கு சுழற்கேடயங்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பாக பணியாற்றிய 391 சேலம் கோட்ட ஊழியர்கள் மற்றும் 24 அதிகாரிகளுக்கு ஹரிசங்கர் வர்மா சான்றிதழ்களையும், ரொக்கப்பரிசையும் வழங்கினார்.
முன்னதாக ஊழியர்களின் குழந்தைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் முதுநிலை வணிக மேலாளர் விஜூவின், கோட்ட வணிக மேலாளர் மாது, உதவி வணிக மேலாளர் ஷாஜகான் மற்றும் சேலம் கோட்ட ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story