ஆண்டிப்பட்டி அனுமதியின்றி மண் அள்ளுவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்


ஆண்டிப்பட்டி அனுமதியின்றி மண் அள்ளுவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
x
தினத்தந்தி 18 April 2018 3:45 AM IST (Updated: 17 April 2018 11:47 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி தாலுகாவில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி தாலுகாவில் ஓடைகள், குளங்கள் அதிகமாக உள்ளன. இங்குள்ள நீர்நிலைகளில் கடந்த சில ஆண்டுகளாக அனுமதியின்றி மண் அள்ளப்பட்டு வருகிறது. சமீபகாலமாக, விவசாய பட்டா நிலத்திலும் மண் எடுத்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அரசு அனுமதித்த அளவு மற்றும் பரப்பளவை விட அதிகமாக மண் அள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக ராஜதானி, தெப்பம்பட்டி, கணேசபுரம், கண்டமனூர், பாலக்கோம்பை, வண்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணிசமான அளவு மண் அள்ளப்பட்டு வருகிறது. அரசு வழங்கும் ஒரு அனுமதி சீட்டை வைத்து, பலமுறை மண் அள்ளப்படுகிறது. இதைத்தவிர நள்ளிரவு நேரங்களில் அதிகளவு மண் அள்ளப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

ஏற்கனவே ஆண்டுதோறும் பருவமழை குறைந்து வருகிறது. இதனால் தேனி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக குறைந்து விட்டது.

இந்தநிலையில் ஆண்டிப்பட்டி தாலுகாவில் அளவுக்கு அதிகமான மண் அள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏற்கனவே குறைந்திருந்த நிலத்தடிநீர் மட்டம் தற்போது அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. நிலத்தடிநீர் பற்றாக்குறை காரணமாக, முற்றிலும் விவசாயம் முடங்கியுள்ளது. ஆண்டிப்பட்டி தாலுகாவில் விவசாயத்தின் பரப்பளவு நாளுக்குநாள் குறைந்து கொண்டே இருக்கிறது.

மண்வளம் தொடர்ந்து சுரண்டப்படுவதால், விவசாயம் மட்டுமின்றி குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பருவமழை பெய்த போது ஓரளவு நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்தது. ஆனால் மழை நின்ற ஒரு மாதத்துக்குள் மீண்டும் நிலத்தடி நீர்மட்டம் குறைய தொடங்கியுள்ளது.

இதேநிலை நீடித்தால் கோடைகாலத்தில், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அனைத்து பகுதிகளிலும் ஆழ்துளை கிணறுகள் மற்றும் விவசாய கிணறுகள் அடியோடு வறண்டு போகும் அபாயம் உருவாகியுள்ளது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மண் அள்ளுவதை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story