கொளப்பாக்கத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு படை அலுவலகத்தில் நுழைந்த வாலிபர் கைது


கொளப்பாக்கத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு படை அலுவலகத்தில் நுழைந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 April 2018 3:45 AM IST (Updated: 18 April 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

கொளப்பாக்கத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு படை அலுவலகத்தில் நுழைந்த ஒடிசா வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கொளப்பாக்கம் பகுதியில் தென்னிந்திய மாநிலத்திற்காக தேசிய பாதுகாப்பு படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த அலுவலகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் ஒரு வாலிபர் தேசிய பாதுகாப்பு படை அலுவலகத்தின் தடுப்பு வேலியில் ஏறி அத்துமீறி உள்ளே நுழைந்தார்.

இதை பார்த்த தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரை தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் விசாரித்த போது அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிந்துநா பிரசாத் (வயது38) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து தேசிய பாதுகாப்பு படை அதிகாரி அந்த வாலிபரை ஓட்டேரி போலீசில் ஒப்படைத்தார். அத்துமீறி உள்ளே நுழைந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒடிசா வாலிபரை கைது செய்து எதற்காக தேசிய பாதுகாப்பு படை அலுவலகத்திற்குள் நுழைந்தார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story