மாணவர்களுக்கு போராட்ட உணர்வு வந்து விட்டது - வைகோ பேட்டி


மாணவர்களுக்கு போராட்ட உணர்வு வந்து விட்டது - வைகோ பேட்டி
x
தினத்தந்தி 18 April 2018 5:15 AM IST (Updated: 18 April 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு போராட்ட உணர்வு வந்து விட்டது என்று வைகோ தெரிவித்தார்.

சிவகாசி,

மதுரையில் நடைபெற்ற நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு கூட்டத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ம.தி.மு.க. நிர்வாகி சிவகாசி ரவியின் 16-வது நாள் நிகழ்ச்சி அவரது வீட்டில் நேற்று நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இதில் பங்கேற்று ரவியின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:-

ரவியின் குடும்ப செலவுக்காக ரூ.35 ஆயிரம் கொடுத்துள்ளேன். இனி ரவியின் குடும்பத்தை பராமரிக்க வேண்டிய பொறுப்பு என்னுடையபொறுப்பு. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொறுப்பு. ரவி சிகிச்சையின் போது என்னிடம் 2 மகன்களை நன்கு படிக்க வையுங்கள் என்றார். கண்டிப்பாக அதை நான் செய்வேன். ரவியின் 2 மகன்கள் பெயரிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் டெபாசிட் செய்ய உள்ளேன். அந்த தொகை மூலம் கிடைக்கும் வட்டி பணம் குடும்ப செலவுக்கு பயன்படும்.

தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்களுக்கு போராட்ட உணர்வு வந்து விட்டது. போர்க்குணம் வந்து விட்டது. 1965-ல் எப்படி ஒரு உணர்வு தமிழக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் இருந்ததோ அதே உணர்வு தற்போது ஏற்பட்டு இருக்கிறது. இது எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது. இனி வரும் காலங்களில் யாரும் தீக்குளிக்க வேண்டாம். போராட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் போராடுங்கள். ஆனால் யாரும் உயிரைமாய்த்துக்கொள்ள வேண்டாம்.

போராட்டத்தில் வெற்றி பெற எல்லா தியாகங்களும் செய்ய தயாராக இருக்க வேண்டும். ஜெயிலுக்கு செல்லத்தயாராக இருங்கள். அடக்குமுறையை ஏவி விட்டால் அதை எதிர்த்து போராடுங்கள். அது போன்ற ஒரு போராட்டத்தில் உயிர் போனால் கூட அது வீரமரணம். நம் உயிரை நாமே போக்கிக்கொள்ள கூடாது. இளைஞர்கள் தியாகம் செய்யும் மனநிலை இருந்தால் போராட்டக்களத்துக்கு வாருங்கள். கட்சியை எல்லாம் மறந்து விட்டு நான் களத்துக்கு வருகிறேன். பொதுப்பிரச்சினைக்காக போராட வரும் இளைஞர்களை நான் அழைக்கிறேன். கட்சி கொடியை தூக்கி எறிந்துவிட்டு நான் போராட வருகிறேன். வாழ்ந்து போராடும் போது அந்த போராட்டம் இன்னும் வலிமைபெறும்.

இன்னும் சில திட்டங்களை நான் வகுத்து வருகிறேன். மத்திய அரசு திட்டமிட்டு தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறது. காவிரி பிரச்சினையில் மத்திய அரசு பச்சைத் துரோகத்தை செய்துள்ளது. மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. தமிழக அரசு நல்ல வக்கீல்களை கொண்டு போராடவில்லை. இப்பவும் தமிழக அரசு மக்களை குழப்புகிறது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியில் இருந்தால் இது போன்ற ஒருநிலை தமிழகத்துக்கு ஏற்பட்டு இருக்காது. இப்போது ஆட்சியில் இருப்போர் மத்திய அரசை பார்த்து பயந்து போய் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story