காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்


காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 18 April 2018 3:45 AM IST (Updated: 18 April 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என சுமை தூக்கும் தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூரில் ஏ.ஐ.டி.யூ.சி. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் சந்தானம் வரவேற்றார். கூட்டத்திற்கு மாநில தலைவர் சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாய விளை பொருட்களை கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று உளுந்து, பயறு வகைகளை நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் கொள்முதல் செய்வதாக அறிவித்துள்ள தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணியின்போது விபத்து ஏற்பட்டால் அதற்கான மருந்து செலவு மற்றும் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக தொழிலாளர்களுக்கான குடும்ப நல நிதி வழங்கப்பட்டது. இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைத்தலைவர் செல்வராசு, சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புண்ணீஸ்வரன், மாநில பொருளாளர் கோவிந்தராஜன், கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ், நுகர்பொருள் வாணிப கழக மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில துணைத்தலைவர் குணசேகரன் நன்றி கூறினார். 

Next Story