சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா-குமாரசாமி போட்டி பிரசாரம்


சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா-குமாரசாமி போட்டி பிரசாரம்
x
தினத்தந்தி 18 April 2018 5:00 AM IST (Updated: 18 April 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா-குமாரசாமி போட்டி பிரசாரம் செய்தனர்.

மைசூரு,

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) சார்பில் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். இதனால், மாநிலத்தில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்-மந்திரி சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மைசூருவுக்கு வந்தார். மைசூரு ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டில் சித்தராமையா ஓய்வு எடுத்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் சாமுண்டீஸ்வரி தொகுதிக்குட்பட்ட 18 கிராமங்களில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், மத்திய பா.ஜனதா அரசின் தோல்விகள் குறித்தும், கடந்த பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்தும் மக்கள் மத்தியில் பேசினார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்துள்ள சாதனைகளையும் சித்தராமையா பட்டியலிட்டார். இதேபோல, அவர் தனது மகன் போட்டியிடும் வருணா தொகுதிக்கும் சென்று யதீந்திராவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவுக்கு போட்டியாக ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி, ஜி.டி.தேவேகவுடாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். கடந்த 4 நாட்களாக மைசூருவில் முகாமிட்டுள்ள குமாரசாமி, கடைசி நாளான நேற்று சாமுண்டீஸ்வரி தொகுதியில் சுமார் 30 கிராமங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரசாரத்தின்போது குமாரசாமி மக்கள் மத்தியில், காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய 2 தேசிய கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருவதாகவும், ஒரு நாணயத்தின் 2 பக்கங்கள் போல, ஊழலில் பா.ஜனதாவும், காங்கிரஸ் கட்சியும் விளங்குவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், மாநில கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆதரிக்கும்படியும் மக்களிடம் கேட்டுக் கொண்டார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஜி.டி.தேவேகவுடாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மக்களிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து குமாரசாமி குடகு மாவட்டத்துக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில், முதல்-மந்திரி சித்தராமையாவின் மகன் யதீந்திராவுக்கு எதிராக பா.ஜனதா சார்பில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா களம் இறங்கி உள்ளார். இந்த நிலையில், நேற்று விஜயேந்திரா வருணா தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் பா.ஜனதா முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர். இதேபோல, மைசூரு மாவட்டத்தில் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Next Story