விழுப்புரத்தில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது
விழுப்புரத்தில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயிலின் அளவு சதத்தை தொட்ட நிலையில் விழுப்புரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் அளவு 93 டிகிரி முதல் 97 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது. கடந்த 2 நாட்களாக விழுப்புரத்தில் வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தது.
அதேபோல் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல, செல்ல வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. மாலை வரை வெயிலின் தாக்கம் இருந்தது. இதன்படி நேற்று விழுப்புரத்தில் 102 டிகிரி வெயில் பதிவானது. சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் குடை பிடித்தபடியும், முகத்தில் கண்கள் மட்டும் தெரியும் படி துணிகளை கட்டிக்கொண்டும், பெண்கள் துப்பட்டா மற்றும் சேலையால் தலையில் போர்த்தியபடியும் இரு சக்கர வாகனங்களில் சென்றதை காண முடிந்தது.
கொளுத்திய வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பெரும்பாலானோர் வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் விழுப்புரம்- புதுச்சேரி சாலை, கே.கே.சாலை, எம்.ஜி.சாலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, திரு.வி.க. சாலை உள்ளிட்ட சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் சாலையோரங்களில் கரும்புச்சாறு, நுங்கு, பழச்சாறு, தர்பூசணி, வெள்ளரிப்பழங்களை விற்பனை செய்ய புதிது, புதிதாக கடைகள் முளைத்துள்ளன. அந்த கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரிவெயில் தொடங்கும் முன்னரே வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story