எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் எச்.ராஜாவின் உருவபொம்மையை தீ வைத்து எரித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தை பற்றி சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும் அவரது உருவபொம்மையை தீ வைத்து எரித்தும் நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து காந்தி சிலை அருகில் எச்.ராஜாவை கண்டித்தும், அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.
பின்னர் எச்.ராஜாவின் உருவபொம்மையை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ராதாமணி எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் புகழேந்தி, துணை செயலாளர் ஜெயச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், நகர செயலா ளர் சக்கரை, துணை செயலாளர் புருஷோத்தமன், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, கல்பட்டு ராஜா, பிரபாகரன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் இளங்கோ, வக்கீல் சுவைசுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப்-இன்ஸ்பெக்டர் மருது மற்றும் போலீசார் விரைந்து சென்று தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் உதயசூரியன் எம்.எல்.ஏ., மாவட்ட தி.மு.க. செயலாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வநாயகம், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எச்.ராஜாவை கண்டித்து தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் எச்.ராஜாவின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். இதில் தியாகதுருகம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் மவுண்ட்பார்க்பள்ளி தாளாளரும், தி.மு.க. பிரமுகருமான மணிமாறன், தியாகதுருகம் வடக்கு ஒன்றிய செயலாளர் திம்மலை நெடுஞ்செழியன், ஒன்றிய துணை செயலாளர்கள் அண்ணாதுரை, சாந்திகணேசன், மாவட்ட பிரதிநிதிகள் மலையரசன், நெடுஞ்செழியன், ஒன்றிய நிர்வாகிகள் பெருமாள், அப்துல்கபூர், இளைஞரணி அமைப்பாளர் சிலம்பரசன், நகர நிர்வாகிகள் முரசொலிமாறன், மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உளுந்தூர்பேட்டையில் எச்.ராஜாவை கண்டித்து நகர தி.மு.க. செயலாளர் டேனியல்ராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் விருத்தாசலம் சாலையில் இருந்து ஊர்வலமாக உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் நோக்கி புறப்பட்டனர். அப்போது அவர்கள், எச்.ராஜாவை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் திருவெண்ணெய்நல்லூர் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் அவர்கள் கொண்டு வந்திருந்த எச்.ராஜாவின் உருவபடங்களை கிழித்தும், அதன் மீது பெட்ரோல் ஊற்றியும் தீ வைத்து கொழுத்தினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், தீயை அணைப்பதற்காக விரைந்து வந்தனர். அப்போது அவர்களை தி.மு.க.வினர் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் தயாளமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் அண்ணாமலை, தயாளன், முருகன், சீனு, அம்பிகா, நகர நிர்வாகிகள் செங்குட்டுவன், இளஞ்செழியன், ஆசீம், கோவிந்தன் உள்பட பலர் எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்தனர். பின்னர் எச்.ராஜாவை கண்டித்து கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story