விழுப்புரம் மாவட்டத்தில் சமையல் கியாஸ் இல்லாதவர்களுக்கு இணைப்பு


விழுப்புரம் மாவட்டத்தில் சமையல் கியாஸ் இல்லாதவர்களுக்கு இணைப்பு
x
தினத்தந்தி 19 April 2018 3:45 AM IST (Updated: 19 April 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் சமையல் கியாஸ் இல்லாதவர்களுக்கு இணைப்பு வழங்கப்பட உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவன மண்டல அதிகாரி ரோஷினிசுராஜ் கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள சமையல் கியாஸ் மொத்த விற்பனையாளர் மற்றும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மண்டல அதிகாரி ரோஷினி சுராஜ் கலந்து கொண்டு சமையல் கியாஸ் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

மத்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய 3 நிறுவனங்கள் சார்பில் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தும் விதம், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகிற 20-ந்தேதி (அதாவது நாளை) நடக்கிறது.

மாவட்டத்திலுள்ள 33 முகவர்கள் மூலம் நேரடியாக ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களிடையே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். அப்போது கியாஸ் சிலிண்டர் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்கள், பாதுகாப்பாக கையாளும் முறை குறித்த பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. இதுவரை சிலிண்டர் இணைப்பு பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், எஸ்.சி., எஸ்.டி., மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னுரிமைப்பிரிவினர், மலைவாழ்மக்கள், 35 கிலோ இலவச அரிசி பெறுபவர்கள் கியாஸ் இணைப்பு பெற தகுதி உள்ளவர்கள் ஆவர். உரிய ஆவணங்களை காண்பித்து கியாஸ் இணைப்பை பெற்றுக்கொள்ளலாம்.

அவர்களுக்கு ரூ.1,600 மதிப்புள்ள அடுப்பு மற்றும் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும். 7-வது மாதத்தில் இருந்து அவர்களது மானியத்தொகையில் இந்த தொகை பிடித்தம் செய்யப்படும். வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்வதில் கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்கள் வருகிறது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 1906 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம் என்றார்.

இவ்வாறு மண்டல அதிகாரி ரோஷினிசுராஜ் கூறினார்.

Next Story