வரும் கல்வி ஆண்டில் பள்ளி கல்வித்துறையில் நிறைய மாற்றங்கள்


வரும் கல்வி ஆண்டில் பள்ளி கல்வித்துறையில் நிறைய மாற்றங்கள்
x
தினத்தந்தி 19 April 2018 3:45 AM IST (Updated: 19 April 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

வரும் கல்வி ஆண்டில் பள்ளி கல்வித்துறையில் நிறைய மாற்றங்கள் வரப்போகிறது என்று முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் கூறினார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிக்கூடங்களில் போதிய கட்டமைப்பு வசதிகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக 29 கமிட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கமிட்டிகளில் இடம்பெற்றுள்ள உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது.

வருகிற கல்வி ஆண்டில் பள்ளி கல்வித்துறையில் நிறைய மாற்றங்கள் வரப்போகிறது. தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்து மண்டல இயக்குனர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு மாவட்டங்களிலும் 3 ஒன்றியங்களுக்கு ஒரு மாவட்ட கல்வி அதிகாரி வீதம் நியமிக்கப்பட உள்ளார். அவருக்கு கீழ் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 2 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள் வீதம் 6 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களின் கட்டுப்பாட்டில் தான் எல்.கே.ஜி. முதல் அனைத்து பள்ளிகளும் இருக்கும்.

இதுபோன்ற மாற்றங்கள் வர இருப்பதால், முதல் கட்டமாக நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளின் கட்டமைப்பை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டு உள்ளார்.

இதற்காக நம் மாவட்டத்தில் 29 குழுக்களை அமைத்து உள்ளோம். எந்தெந்த விவரங்களை சேகரிக்க வேண்டும் என்ற பட்டியலும் உங்களிடம் தரப்பட்டு உள்ளது. அதன்படி பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் பற்றிய விவரங்களை சேகரித்து அன்றன்று அறிக்கை தர வேண்டும். நாளை(அதாவது இன்று) முதல் இந்த பணியை தொடங்கப்போகிறீர்கள், வருகிற மே மாதம் முதல் வாரத்துக்குள் பணியை முடித்து விட வேண்டும்.

நந்திமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஊர் மக்கள் கல்விச்சீர் வழங்கி உள்ளனர். இதற்காக கிராம மக்களை பாராட்டுகிறேன். அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஈடுபாட்டோடு பணியாற்றியதால் கிராம மக்களே சீர் வழங்கி உள்ளனர். இதேபோல் எல்லா தலைமை ஆசிரியர்களும் அக்கறையோடு பணியாற்றினால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.

இவ்வாறு முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் கூறினார்.

Next Story