பேராசிரியையின் உரையாடல் வழக்கில் கவர்னர் அவசரம் காட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது


பேராசிரியையின் உரையாடல் வழக்கில் கவர்னர் அவசரம் காட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
x
தினத்தந்தி 19 April 2018 4:30 AM IST (Updated: 19 April 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

பேராசிரியையின் சர்ச்சைக்குரிய உரையாடல் வழக்கில் கவர்னர் அவசரம் காட்டுவது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என சரத்குமார் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி கவுரவ தலைவர் சீனிவாசன் இறந்ததை தொடர்ந்து, அவரது உடலுக்கு மரியாதை செலுத்த அக்கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் நேற்று புதுக்கோட்டைக்கு வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளிடம் நடத்திய சர்ச்சைக்குரிய உரையாடல் வழக்கில், கவர்னர் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார் என்று தெரியவில்லை. தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் கவர்னர் இதேபோல அவசரம் காட்டுவதுதான் அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்த வழக்கை தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உள்ளது. எல்லா வழக்குகளையும், சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று கூறுவது தவறான வாதம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் மட்டுமே காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். ஆனால் கர்நாடக தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா என்பது சந்தேகமே?. அதன்பிறகும் அமையுமா என்பதும் கேள்விக்குறியே?. தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் காவிரி பிரச்சினையில் ஒருமித்த கருத்தோடு போராடி வருகின்றன.

சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் சென்னையில் வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story