கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது


கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது
x
தினத்தந்தி 19 April 2018 3:45 AM IST (Updated: 19 April 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு பணிக்கான பூமிபூஜை நடைபெற்று முதற்பட்ட பணிகள் நேற்று தொடங்கியது.

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கீழடி. இங்கு பண்டைய தமிழர் நாகரிகம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிய கடந்த 2015-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. முதற்கட்டமாக நடந்த இந்த அகழாய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. இதனையடுத்து 2016-ம் ஆண்டு 2-ம் கட்டமாகவும், 2017-ம் ஆண்டு 3-ம் கட்டமாக கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்றது. இதில் கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என சுமார் 1,600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.

அகழாய்வு முடிவில் கீழடியில் வைகை ஆற்றின் கரையோரத்தில் பண்டைய தமிழர்கள் நகரம் அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதனைத்தொடர்ந்து கீழடியில் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கீழடியில் ஆய்வு செய்து 4-ம் கட்ட அகழாய்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.

இந்தநிலையில் கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு பணிக்கு சோனை என்ற விவசாயி தனக்கு சொந்தமான 2½ ஏக்கர் நிலத்தை வழங்கினார். இதனைத்தொடர்ந்து அங்கு 4-ம் கட்ட பணிக்கான முதற்கட்ட பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. முன்னதாக அதற்கான பூமிபூஜையும் போடப்பட்டது. நிகழ்ச்சியில் அகழ்வாராய்ச்சி துறை துணை இயக்குனர் சிவானந்தம், கண்காணிப்பாளர் சக்திவேல், உதவி பொறியாளர் ஒலிமாலிக், தாசில்தார் கமலா, மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடேஷ் மற்றும் கிராம பொதுமக்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story