காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி டி.டி.வி தினகரன் தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி டி.டி.வி தினகரன் தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 April 2018 3:45 AM IST (Updated: 19 April 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாமக்கல்லில் நாளை டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

நாமக்கல்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாமக்கல்லில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக அவைத் தலைவரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான அன்பழகன், மேற்கு மாவட்ட செயலாளர் சாமிநாதன், மாநில அமைப்பு செயலாளர் என்.கே.பி. ரவிக்குமார் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, தலைமை நிலைய செயலாளர் பழனியப்பன் உள்பட தலைமை கழக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் என பல்வேறு பிரச்சினைகளில் மக்கள் நலனிற்காக டி.டி.வி தினகரன் போராடி வருகிறார். குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் கோரி தஞ்சாவூரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம், திருச்சியில் விமான நிலைய முற்றுகைப் போராட்டம், அதைத்தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பல்வேறு விதத்தில் நாளுக்கு நாள் மக்களுக்காக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். அதற்கு மக்கள் மத்தியிலும் ஆதரவு பெருகி வருகிறது. எனவே அவரின் கரத்தை வலுப்படுத்தும் விதத்தில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் தங்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டு போராட முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story