சேலத்தில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
சேலத்தில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். பிரபல ரவுடி உள்பட 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
சேலம்,
சேலம் கருக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் பத்மராஜ் (வயது 63) ரியஸ் எஸ்டேட் அதிபர். இவர் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த பிரபல ரவுடி ஜவகர் (45), அல்லிகுட்டை காலனியை சேர்ந்த ஆறுமுகம் (40), அன்னதானபட்டி பஞ்சாலி நகரை சேர்ந்த செந்தூர் கார்த்திக் (46) ஆகியோரிடம் நிலம் வாங்கி தருமாறு கூறினார். இதற்காக சேலத்தில் குறிப்பிட்ட அளவு நிலம் வழங்குவதாகவும் அவர்களிடம் பத்மராஜ் தெரிவித்தார்.
இதையடுத்து ஜவகர், ஆறுமுகம், செந்தூர் கார்த்திக் ஆகியோர் சேர்ந்து நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் 7 ஏக்கர் நிலத்தை பத்மராஜூக்கு வாங்கி கொடுத்தனர். இதற்காக அவர்களுக்கு சேலத்தில் குறிப்பிட்ட அளவு நிலத்தை மாற்றிக்கொடுப்பதற்காக ஆவணங்களை தயார் செய்யுமாறு அவர்களிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து ஜவகர், ஆறுமுகம், செந்தூர் கார்த்திக் ஆகியோர் ஆவணங்களை தயார் செய்து பத்மராஜூவிடம் கையெழுத்து பெற்றனர். இதில் அவருக்கு தெரியாமல், பத்மராஜூவின் 34 ஏக்கர் நிலம், 4 வீட்டுமனை, ஒரு வீடு என மொத்தம் சுமார் ரூ.25 கோடி மதிப்பிலான நிலத்திற்கான ஆவணங்களிலும் கையெழுத்து பெற்றுள்ளனர். இது பத்மராஜூக்கு தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர்களிடம் ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என கேட்டார்.
இதைக்கேட்ட அவர்கள் 3 பேரும் ரூ.25 கோடி மதிப்பிலான நிலம் எங்களுடையது தான், அதை இனிமேல் திருப்பி கொடுக்க முடியாது என தெரிவித்து விட்டனர். மேலும் ரூ.10 கோடி கொடுத்தால் மட்டுமே திருப்பி கொடுக்க முடியும் என்றனர். இதுகுறித்து நேற்று பத்மராஜ் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து விட்டு நெத்திமேடு அருகே சென்று கொண்டிருந்தார்.
நெத்திமேடு பகுதிக்கு வந்த ஜவகர், ஆறுமுகம், செந்தூர் கார்த்திக் ஆகியோர் எங்கள் மேலேயே புகார் கொடுக்கிறீயா? என கூறி பத்மராஜூக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜவகர், ஆறுமுகம், செந்தூர் கார்த்திக் ஆகியோர் மீது அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் செந்தூர் கார்த்திக் கைது செய்யப்பட்டார். வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். ரூ.25 கோடி நில அபகரிப்பு புகார் தொடர்பாக நில அபகரிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story