கோவில் யானை ராஜேஸ்வரியை, டாக்டர்கள் குழுவினர் நேரில் ஆய்வு


கோவில் யானை ராஜேஸ்வரியை, டாக்டர்கள் குழுவினர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 19 April 2018 4:30 AM IST (Updated: 19 April 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

கருணை கொலைக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து கோவில் யானை ராஜேஸ்வரியை, டாக்டர்கள் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

சேலம், 

சேலம் சுகவனேசுவரர் கோவில் யானை ராஜேஸ்வரி, உடல்நிலை பாதிப்பு காரணமாக சேலம் கோரிமேட்டில் தனி இடத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 45 நாட்களுக்கு முன்பு படுத்த படுக்கையான யானைக்கு டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்தாலும், உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

இதற்கிடையே யானை ராஜேஸ்வரியை கருணை கொலை செய்வதற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் டாக்டர்கள் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க விதித்த 48 மணிநேர கெடுவும் இன்றுடன் முடிகிறது.

இந்த ஆணையை பெற்ற சேலம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், யானை ராஜேஸ்வரியின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்திட கால்நடைத்துறை டாக்டர்களுக்கு பரிந்துரை செய்தனர். அதை ஏற்று, பரிசோதனை செய்து ஆய்வறிக்கை தயார் செய்திட டாக்டர் குழுவும் நியமிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று சென்னை, நாமக்கல் கால்நடை அறிவியல் மருத்துவ கல்லூரி டாக்டர்கள் தங்கராஜ், விஜயகுமார், குமரேசன் மற்றும் சேலம் மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் லோகநாதன் அடங்கிய குழுவினர் யானை ராஜேஸ்வரியின் உடல் நிலையை பரிசோதனை செய்து ஆய்வு நடத்தினர். அப்போது யானைக்கு இதுவரை வழங்கப்பட்ட உணவுமுறை குறித்தும், அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும், எழுந்திருக்க முடியாமல் எத்தனை நாளாக படுத்த படுக்கையாக உள்ளது? என்பன போன்ற விவரங்களை கேட்டறிந்தனர். இது தொடர்பான அறிக்கை இன்று(வியாழக்கிழமை) சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து யானை கருணை கொலை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

Next Story