மனிதனின் வளர்ச்சிக்கு வித்திட்ட பாலங்கள்!


மனிதனின் வளர்ச்சிக்கு வித்திட்ட பாலங்கள்!
x
தினத்தந்தி 19 April 2018 10:45 PM GMT (Updated: 19 April 2018 6:58 AM GMT)

சிறிய பள்ளங்களை கடக்க புதிய கற்கால மனிதர்கள் உறுதியான மரப்பலகைகளை பயன்படுத்தினார்கள். இதுவே பாலங்களின் அடிப்படையாகும்.

மனிதன் நிலையாக ஓரிடத்தில் தங்கி விவசாயம் செய்ய ஆரம்பித்தபின், வணிகம் வளர்ந்தது. வேறு பகுதியில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்ளவும், பண்டமாற்று செய்யவும் பயணித்தபோது குறுக்கே வந்த ஆறுகளும், பள்ளங்களும் பெரும் தடையாக இருந்தன. ஆற்றின் மீது இயற்கையாக சாய்ந்து கிடந்த மரங்களும், மேடாக இருந்த பாறைகளும் மனிதர்க்கு பாலம் உருவாக்கும் எண்ணத்தைத் தந்தது.

சிறிய பள்ளங்களை கடக்க புதிய கற்கால மனிதர்கள் உறுதியான மரப்பலகைகளை பயன்படுத்தினார்கள். இதுவே பாலங்களின் அடிப்படையாகும். பின்னர் உத்திரங்களை இணைத்து உருவாக்கும் பாலங்களும், தொங்கு பாலங்களும் உருவாகின. புதிய கற்கால மனிதர்கள் வளைவுப் பாலங்களை அறியவில்லை. அவர்கள் தனக்கு எளிதாக கிடைத்த மரங்களையும், கயிற்றையும் கொண்டு பாலங்களை உருவாக்கினார்கள்.

மரங்கள் நீண்ட காலம் பயன்தராததால் பின்னர் கற்களைக் கொண்டு பாலம் அமைக்க எண்ணினர். அது அவ்வளவு எளிதாக அமையவில்லை, காரணம் கற்களில் மரங்களில் செய்வதுபோல் வேலைப்பாடுகளை செய்யமுடியவில்லை. வளைவுகளை உருவாக்க முடியவில்லை.

வளைவுப் பாலங்கள் அமைப்பதில் கிரேக்கர்கள் வல்லவர்களாக திகழ்ந்தனர். ஆனால் கடல் பயணிகளாக வாழ்ந்த கிரேக்கர்களுக்கு பாலங்களின் தேவை அவ்வளவாக இல்லை. பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியத்தை கொண்ட ரோமானியர்களுக்கு ஆட்சி நிர்வாகத்திற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் பாலங்கள் அத்தியாவசியமானதாக இருந்தன. அதனால் கிரேக்கர்களைப் பின்பற்றி அதிகமான பாலங்களை ரோமானியர்கள் உருவாக்கினர். கண்டுபிடிப்பாளர்கள் யாருமில்லாத காலத்தில் அவர்களால் மகத்தான பாலங்களை வடிவமைக்க முடிந்தமைக்கு காரணம், நிர்வாகத் தேவையே. இருந்தாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை சாதாரண பாலங்கள்தான் வழக்கத்தில் இருந்தன.

கி. பி. 1000 ஆண்டுகளில் ஆங்கிலேயர்களால் பாலம் கட்டும் கலை துளிர்விடத் துவங்கியது. 1100-1500 காலகட்டங்களில் மன்னர்களும், பிரபுகளும் கோட்டையுடன் இணைந்த அகழிகளைக் கடக்கும் பாலங்களை உருவாக்கினர். இருந்தாலும் கட்டிடக்கலையின் நுணுக்கம் தெரியாமல் அமைக்கப்பட்ட பல்வேறு பாலங்கள் இடிய ஆரம்பித்தன. தூண்களுக்கு இடைப்பட்ட சீரற்ற தூரம், சமமற்ற வளைவு, பெரிய பாகங்களின் அதிக எடையின் காரணத்தாலும் பெரும்பாலான பாலங்கள் இடிந்தன.

மறுமலர்ச்சிக் காலத்தில் கட்டிட கலையில் ஏற்பட்ட விஞ்ஞானப் பூர்வ வளர்ச்சியின் காரணத்தால் பாலம் கட்டும் கலை மேம்பட்டது. பொறியியல் வல்லுநர்கள் பாலங்களின் எடையைக் குறைத்தனர். பொறியியலாளரும், கட்டடக் கலை நிபுணர்களும் இணைந்து உருவாக்கிய பாலங்கள் பிரான்ஸ் நாட்டில் தோன்றின.

1709-ம் ஆண்டு உருவான வார்ப்பு இரும்பின் பயனால் ரோமானியர் காலத்து பாலங்கள் புத்துயிர் பெற்றன. தொடர் வண்டி கண்டறியப்பட்ட பின் அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்கவும், அதிக எடையை தாங்குவதற்கும் இரும்பு பாலங்களின் தேவை அதிகமானது. இரும்பு பாலங்களினால் புதிய உலகிற்கான வாசல் திறக்கப் பட்டது. இருபதாம் நூற்றாண்டில் ரெயில் வண்டிகள் செல்வதற்கான பாலங்கள் உருவாக்கப்பட்டன.

கடந்த 2 நூற்றாண்டுகளில் உலோகத்தின் பயனால் உலகின் பல இடங்களிலும் பிரம்மாண்டமான பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஜப்பானியர்கள் ஹான்ஹு ஷிகோ கூ மாகாணங்களை இணைக்க 5840 அடி நீளமுள்ள பாலத்தை அமைத்தார்கள். அலுமினியத்தால் பாலங்களின் எடை மேலும் குறைந்தன. இங்கிலீஷ் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள பாலமும், அமெரிக்காவின் புரூக்ளின் பாலமும், பாலம் கட்டும் கலையின் மைல் கற்களாகும். 

Next Story
  • chat