ஏரிகளை தூர்வார வேண்டும் நாமக்கல்லில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி


ஏரிகளை தூர்வார வேண்டும் நாமக்கல்லில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 20 April 2018 4:30 AM IST (Updated: 20 April 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

ஏரிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி தூர்வார வேண்டும் என நாமக்கல்லில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.

நாமக்கல்,

நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய கோரியும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாகண்ணு கன்னியாகுமரி முதல் சென்னை கோட்டை வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மார்ச் 1-ந் தேதி தொடங்கி நேற்று 50-வது நாளாக நாமக்கல் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார்.

சேந்தமங்கலம், ராமநாதபுரம், புதன்சந்தை, காந்திபுரம், காரவள்ளி, காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி உள்பட நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்தை சந்தித்து விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு கோரிக்கை மனு அளித்தார்.

அதன் பின்னர் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அய்யாக்கண்ணு கூறியதாவது:-

உச்சநீதிமன்றம் சொல்லியும் காவிரி நீர் வழங்கப்படாததாலும், விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்காததாலும் விவசாயிகள் விவசாயத்தை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டு உள்ளது. 18-வது மாவட்டமாக நாமக்கல் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளோம். இடும்பன் ஏரி, வாழவந்தி ஏரி மற்றும் பொம்மசமுத்திரம் ஏரிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிவிட்டு தூர் வார வேண்டும் எனவும், காவிரியில் களிமேடு என்ற இடத்தில் தடுப்பனை கட்ட மதிப்பீடு செய்துவிட்டு, அதை அணுச்சம்பாளையத்தில் பேப்பர் மில் இருக்கும் இடத்தில் கட்ட ஏற்பாடு நடப்பதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

மேலும் கூட்டுறவு சங்கங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்கவும், காப்பீடு மற்றும் நஷ்டஈடு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி மற்றும் குளங்களில் அரசோ, விவசாயிகளோ அல்லது யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அதனை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அவைகளை கேட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இவ்வாறு அய்யாக்கண்ணு தெரிவித்தார். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த பொதுமக்களிடம் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது விவசாய சங்க நிர்வாகிகள் அவருடன் இருந்தனர். 

Next Story