மாவட்டத்தில் 17,640 குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்படும்
கடலூர் மாவட்டத்தில் 164 ஊராட்சிகளில் 17 ஆயிரத்து 640 குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தண்டபாணி தெரிவித்தார்.
கடலூர்,
அகில இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சிகளில் அடுத்த மாதம்(மே) 5-ந் தேதி வரை கிராம சுயராச்சிய இயக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதில் ஒரு பகுதியாக இந்திய அளவில் 15 ஆயிரம் கிராமங்களிலும், தமிழ்நாட்டில் ஆயிரத்து 750 கிராமங்களிலும், கடலூர் மாவட்டத்தில் 164 கிராமங்களிலும் சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட உள்ளது.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா, உஜ்வாலா திவாஸ் ஆகிய இயக்கத்தின் சார்பில் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள 164 ஊராட்சிகளில் முதல் கட்டமாக 35 கிராமங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரதம மந்திரி சமையல் கியாஸ் வழங்கும் திட்டத்தின் கீழ் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் இருந்து, சமையல் கியாஸ் இணைப்பு இல்லாத குடும்பங்களை தேர்வு செய்து சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட உள்ளது.
அதன் அடிப்படையில் இந்த 164 ஊராட்சிகளிலும் 17 ஆயிரத்து 640 குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட உள்ளது. கியாஸ் இணைப்பு வழங்கிட துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
சமையல் கியாஸ் இணைப்பு பெற இதர உதிரிபாக கட்டணமாக ரூ.1,600 மத்திய அரசால் வழங்கப்படும். அதேபோல் ரூ.990 மதிப்புள்ள கியாஸ் அடுப்பு மற்றும் ரூ.682 மதிப்புள்ள கியாஸ் சிலிண்டர் என மொத்தம் ரூ.1,672-ஐ கியாஸ் இணைப்பு பெறுபவர்கள் ரொக்கமாகவோ அல்லது முகவர்கள் மூலம் தவணை முறையில் கடனாகவும் வழங்கலாம். கடன் தொகை கியாஸ் இணைப்புக்கான மானிய தொகையில் ஈடு செய்யப்படும். எனவே பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் வட்டார மேலாளர் அரிகிருஷ்ணன் கூறும்போது, கிராம சுயராச்சிய இயக்கத்தின் ஒரு அங்கமாக இன்று(வெள்ளிக்கிழமை) உஜ்வாலா தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தகுதி உள்ள பயனாளிகளை தேர்வு செய்து கியாஸ் இணைப்பு வழங்குவதோடு, சமையல் கியாஸ் இணைப்பை பாதுகாப்பாக கையாளுவது எப்படி? பெண்களின் உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவை குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே ஏற்கனவே கியாஸ் இணைப்பு உள்ளவர்களும், புதிதாக இணைப்பு பெற உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்றார்.
அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆனந்ராஜ், செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story