மின்மோட்டார் மூலம் குடிநீர் குழாய்களில் தண்ணீர் உறிஞ்சி எடுப்பதை தடுக்க பறக்கும் படை நியமனம்


மின்மோட்டார் மூலம் குடிநீர் குழாய்களில் தண்ணீர் உறிஞ்சி எடுப்பதை தடுக்க பறக்கும் படை நியமனம்
x
தினத்தந்தி 20 April 2018 3:41 AM IST (Updated: 20 April 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் தாலுகா பகுதிகளில் மின் மோட்டார் மூலம் குடிநீர் குழாய்களில் தண்ணீர் உறிஞ்சி எடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.

அரக்கோணம்,

கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கலெக்டர் ராமன் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பறக்கும் படை நியமித்துள்ளார்.

அரக்கோணம் தாலுகாவில் பறக்கும்படை குழுவில் தாசில்தார் பாபு தலைமையில் உறுப்பினர்கள் ஆணையாளர் கமலகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, மணிவண்ணன், தக்கோலம் பேரூராட்சி செயல் அலுவலர் வேணி, பொறியாளர் சண்முகம், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் பழனி, திருமால், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

அரக்கோணம் நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் 8 ஆயிரத்து 623 குடிநீர் குழாய்கள் உள்ளது. இந்த பகுதிகளில் சட்ட விதிமுறைகளை மீறி மின்மோட்டார் மூலமாக குடிநீர் குழாய்களில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்படுவதாக புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து நேற்று அரக்கோணம் தாசில்தார் மற்றும் ஆணையாளர் உள்ளிட்ட பறக்கும்படை உறுப்பினர்கள் அரக்கோணம் வள்ளலார் தெரு, மீஞ்சூர் சுப்பிரமணியம் தெரு, தியாகி சின்னசாமி தெரு, பாரதிதாசனார் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வீடு, வீடாக சென்று வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளதா? என ஆய்வு செய்தனர். அப்போது 3 வீடுகளில் மின்மோட்டார் இணைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மின்மோட்டார்களை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தாசில்தார் மற்றும் நகராட்சி ஆணையாளர் கூறியதாவது:-

குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் இணைத்து தண்ணீர் உறிஞ்சுவது சட்டப்படி குற்றமாகும். மின்மோட்டார்களை கைப்பற்றவும், அபராதம் விதிக்கவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. முதல்முறையாக மின்மோட்டாரை கைப்பற்றினால் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு மின் மோட்டார் திருப்பி தரப்படும்.

ஒரே நபர் அதே தவறை செய்தால் அவரது வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே பயனாளிகள் தாங்களாகவே முன்வந்து தங்கள் பகுதிகளில் மின் மோட்டார் பொருத்தி இருந்தால் அதை அகற்றி விடவேண்டும்.

வேறு யாரேனும் மின்மோட்டார் மூலமாக தண்ணீரை உறிஞ்சுவது தெரிந்தால் பறக்கும்படையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் கொடுப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க பொதுமக்கள் நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

மேலும் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் பறக்கும் படையினர் சோதனை செய்யப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story