சிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பா வேட்புமனு தாக்கல்


சிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பா வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 20 April 2018 4:22 AM IST (Updated: 20 April 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

சிகாரிபுரா தொகுதியில் போட்டியிடும் எடியூரப்பா நேற்று தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்று அவர் நிருபர்களிடம் கூறினார்.

சிவமொக்கா,

கர்நாடகத்தில் அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. வருகிற 24-ந் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. இந்த தேர்தலில், சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தொகுதியில் பா.ஜனதா சார்பில் கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா போட்டியிடுகிறார். மேலும் அவர் பா.ஜனதா சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 19-ந் தேதி அன்று(அதாவது நேற்று) நான் வேட்புமனுவை தாக்கல் செய்வேன் என்று எடியூரப்பா ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி நேற்று எடியூரப்பா, சத்தீஸ்கார் மாநில முதல்-மந்திரி ராமன்சிங், மத்திய மந்திரி அனந்தகுமார் மற்றும் கட்சி தொண்டர்களுடன் சிகாரிபுராவில் உள்ள தனது வீட்டில் இருந்து ஊர்வலமாக தேர்தல் அலுவலகத்திற்கு வந்தார்.

பின்னர் அவர் தேர்தல் அலுவலகத்திற்கு சென்று, தேர்தல் அதிகாரி ரங்கசாமியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிகாரிபுரா தொகுதி மக்கள் என்னை(எடியூரப்பா) சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வார்கள். பா.ஜனதா ஆட்சி அமைந்தவுடன் சிகாரிபுரா தொகுதியில் குடிநீர் தேவைக்காக ரூ.1 கோடி நிதி தனியாக ஒதுக்கப்படும். சிகாரிபுரா ரெயில்வே திட்டம் விரைந்து நடக்க உள்ளது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பா.ஜனதா ஆட்சி அமைந்தவுடன் சிகாரிபுரா தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

லிங்காயத் சமுதாயத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள பிரச்சினை இந்த தேர்தலில் எதிரொலிக்குமா? என்று பலர் கேட்கிறார்கள். இதன்காரணமாக பா.ஜனதாவுக்கு வெற்றிவாய்ப்பு குறைந்து விடுமா? என்றும் பலர் கேள்வி எழுப்புகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அப்படி நடக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு எடியூரப்பா கூறினார். 

Next Story