அடிப்படை வசதிகள் கோரி ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா


அடிப்படை வசதிகள் கோரி ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 19 April 2018 11:24 PM GMT (Updated: 19 April 2018 11:24 PM GMT)

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி,

பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சி 16-வது வார்டில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த வார்டு பகுதியில் கடந்த ஓராண்டாக கழிப்பறை, சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். மேலும் கோரிக்கை மனுக்களும் அளித்தனர்.

ஆனால் தற்போது வரை அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கோரிக்கைகள் எழுதப்பட்ட அட்டைகளுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர்.

பின்னர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் போராட்டம் குறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பேரூர் செயலாளர் பிரபு, கிளை பொருளாளர் கார்த்தீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கு சென்று பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் 3 மாத காலத்துக்குள் 16-வது வார்டில் அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story