பாரம்பரிய கலைகளை போற்றி பாதுகாக்க வேண்டும் கலெக்டர் அறிவுரை


பாரம்பரிய கலைகளை போற்றி பாதுகாக்க வேண்டும் கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 20 April 2018 10:30 PM GMT (Updated: 20 April 2018 6:52 PM GMT)

பாரம்பரிய கலைகளை போற்றி பாதுகாக்க வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் அறிவுரை வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் சேலம் மண்டல கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாவட்ட அரசு இசைப்பள்ளியின் 19-ம் ஆண்டு விழா, தமிழிசை விழா மற்றும் ஜவகர் சிறுவர் மன்ற ஆண்டு ஆகிய முப்பெரும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி பேசியதாவது:-

கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவற்றை பேணிக் காக்க வேண்டும். நம் முன்னோர்களுடைய பாரம்பரிய கலைகள் மறையாமல் இருக்க கலைகளை நாம் வளர்க்க வேண்டும். இசை என்பது நம் மனத்திற்கு மட்டுமல்ல, அவை நம் வாழ்க்கை முறைக்கும் ஒத்து போகக்கூடியதாகும். நாதஸ்வரம், தவில், கரகாட்டம், குச்சிபுடி, மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் நம் நாட்டில் முன்னோர்கள் பின்பற்றி கலையை வளர்த்தார்கள். அக்கலைகளை போற்றி பாதுகாக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியின் போது குரலிசை கலைஞர் சூர்யஸ்ரீகுமார் என்பவருக்கு கலை முதுமணி விருதும், மிருதங்க கலைஞர் மீனாகுமாரிக்கு கலை நன்மணி விருதும், தெருகூத்து கலைஞர் சேகருக்கு கலை சுடர்மணி விருதும், ஓவிய கலைஞர் சுரேசுக்கு வளர்மணி விருதும், குரலிசை ஆர்மோனியம் கலைஞர் ஜனாவிற்கு கலை இளமணி விருதும் மற்றும் பரிசு தொகைக்கான காசோலைகளும் வழங்கப்பட்டது.

மேலும் கிராமிய நடன போட்டியில் சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்த 3 கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களும், மாவட்ட கலை போட்டியில் சீனியர் பாட்டு போட்டியில் 3 கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களும், பரதநாட்டியம் போட்டியில் முதல் பரிசு பெற்ற மதுமிதா, இரண்டாம் பரிசு பெற்ற அனிச்சமலர், மூன்றாம் பரிசு பெற்ற பத்மஸ்ரீ ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

இதே போல் சீனியர் பிரிவில் மீனலோக்‌ஷினிக்கு முதல் பரிசும், மோகனப்பிரியாவிற்கு இரண்டாம் பரிசும், சவுந்தர்யாவிற்கு மூன்றாம் பரிசும், ஓவிய போட்டியில் சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 6 கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை கலெக்டர் கதிரவன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கரராமன், சத்தியமூர்த்தி, லட்சுமிநாராயணன் மற்றும் ஆரியபவன் நடராஜன் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சேலம் மண்டல கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் ஹேமநாதன் வரவேற்று பேசினார். முடிவில், அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் உத்திரகுமாரன் நன்றி கூறினார்.

Next Story