பள்ளி வேன் கவிழ்ந்து 22 மாணவ-மாணவிகள் காயம்


பள்ளி வேன் கவிழ்ந்து 22 மாணவ-மாணவிகள் காயம்
x
தினத்தந்தி 21 April 2018 3:45 AM IST (Updated: 21 April 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

உடையார்பாளையம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து, 22 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.

உடையார்பாளையம், 

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் மாந்தோப்பில் நல்லாசிரியர் திரு ராமச்சந்திரா மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான வேன் மற்றும் பஸ்கள் மூலம் மாணவ-மாணவிகளை காலையில் பள்ளிக்கு அழைத்து வந்து, பின்னர் மாலை அவரவர் வீட்டிற்கு கொண்டு சென்று விடுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சென்றது. வேனை டிரைவர் கண்ணன் (வயது 36) ஓட்டினார்.

மாந்தோப்பு பிரிவுபாதை அருகே வந்தபோது, அங்குள்ள வளைவில் வேன் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் வேன் கவிழ்ந்தது. இதில், வேனில் இருந்த கொளஞ்சிநாதன் (வயது 9), விஜய் (9), அகிலன் (9), ரகு (13), அட்சயா (6), கஸ்தூரி(6) உள்பட 22 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.

அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story