10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்தது: மாணவ, மாணவிகள் கொண்டாட்டம்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிந்ததை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமரைக்குளம்,
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி தமிழ் முதல் தாளோடு தொடங்கியது. இதைத் தொடர்ந்து தமிழ் 2-ம் தாள், ஆங்கிலம் முதல், 2-ம் தாள், கணிதம், அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வின் நிறைவு நாளான நேற்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற சமூக அறிவியல் தேர்வு மிக எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மற்றும் உடையார்பாளையம் ஆகிய 2 கல்வி மாவட்டங்களில் 43 மையங்களில் 165 பள்ளிகளில் இருந்து 10 ஆயிரத்து 907 பேர் தேர்வு எழுதினர். நேற்றுடன் தேர்வு முடிந்ததை தொடர்ந்து மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வு அறையை விட்டு வெளியில் வந்தனர். பின்னர் ஒருவரையொருவர் கட்டி தழுவி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் பேனா மையை சட்டையில் தெளித்து மகிழ்ந்தனர்.
தேர்வு முடிந்து வெளியில் வந்த மாணவ, மாணவிகள் கூறுகையில், அனைத்து பாடத்தேர்வுகளும் சுலபமாக இருந்ததால், அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த கோடை விடுமுறையில் மேல் வகுப்புகளுக்கு எங்களை தயார்படுத்தும் விதமாக கணினி பயிற்சி, தட்டச்சு பயிற்சி, ஆங்கில மொழி பயிற்சி போன்ற பயனுள்ள வகையிலும், கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் சுற்றுலா போன்றவற்றில் பங்கேற்று மகிழ்ச்சியடைவோம், என்றனர்.
இதேபோன்று பெரம்பலூர் மாவட்ட மாணவ-மாணவிகள் தேர்வு முடிந்ததை தொடர்ந்து மிகவும் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி, கொண்டாட்டத்துடன் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.
Related Tags :
Next Story