உளுந்தூர்பேட்டை அருகே பஸ் மோதி சாலையோர பள்ளத்தில் மினிலாரி கவிழ்ந்தது; பெண் பலி


உளுந்தூர்பேட்டை அருகே பஸ் மோதி சாலையோர பள்ளத்தில் மினிலாரி கவிழ்ந்தது; பெண் பலி
x
தினத்தந்தி 20 April 2018 9:30 PM GMT (Updated: 20 April 2018 8:31 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே பஸ் மோதி சாலையோர பள்ளத்தில் மினிலாரி கவிழ்ந்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

உளுந்தூர்பேட்டை,

சேலம் மாவட்டம் கெங்கவெளியை சேர்ந்தவர் காசிலிங்கம். இவரது மனைவி ஜெயராணி (வயது 37). இவரும் அதே பகுதியை சேர்ந்த பெண்கள் சிலரும் கூலி வேலை செய்வதற்காக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் வேலை முடிந்ததும் ஜெயராணி உள்ளிட்டோர் ஒரு மினி லாரியில் ஏறி சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

மினி லாரியை காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த கலியபெருமாள் மகன் விஜய்(36) என்பவர் ஓட்டினார். அந்த மினி லாரி நேற்று அதிகாலை 3 மணி அளவில் உளுந்தூர்பேட்டையை அடுத்த புல்லூர் குறுக்குசாலை அருகே திருச்சி- சென்னை சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மினி லாரி மீது மோதியது. இந்நிலையில் பஸ் மோதிய வேகத்தில் மினிலாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஜெயராணி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மினி லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி ருக்குமணி(45), முத்துலட்சுமி(40), தேன்மொழி(43), பிச்சாயி(43) மற்றும் அரசு பஸ் டிரைவர் திருவாரூர் அருகே மன்னார்குடி பகுதியை சேர்ந்த தினகரன்(32) உள்ளிட்ட 12 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த எடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 12 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே விபத்தில் பலியான ஜெயராணியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக திருச்சி- சென்னை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story