பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க பெண் நீதிபதி தலைமையில் தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் - திருமாவளவன் பேட்டி


பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க பெண் நீதிபதி தலைமையில் தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் - திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 21 April 2018 4:15 AM IST (Updated: 21 April 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க பெண் நீதிபதி தலைமையில் தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று திட்டக்குடியில் திருமாவளவன் கூறினார்.

திட்டக்குடி,

திட்டக்குடி, பெண்ணாடம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி வருகிற 23-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெற உள்ள மனிதசங்கிலி போராட்டத்தில் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அடுத்தடுத்து பல்வேறு போராட்டங்கள் நடத்துவதன் மூலம் மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் தரமுடியும், கர்நாடக அரசை விட மத்திய அரசுதான் தேர்தல் ஆதாயத்திற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு தயங்குகிறது.

காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண்பதற்கான இறுதி போர் இது. இந்த போராட்டத்தில் கட்சி சார்பின்றி ஒருமித்த குரலுடன் போராட முன்வர வேண்டும்.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் தன்னிலை விளக்கம் ஏற்புடையதாக இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அவரே ஒரு தனிநபர் ஆணையம் அமைத்ததிலும் உடன்பாடு இல்லை. இதற்கிடையே தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. ஆகவே இது குளறுபடிகளை உண்டாக்கும்.

எனவே மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க பெண் நீதிபதி தலைமையில் பெண்களை கொண்ட தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்து விசாரித்தால்தான் முழு விவரமும் தெரியவரும்.

காஷ்மீரில் 8 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். பெண் குழந்தைகள், பெண்களை பாதுகாக்க அரசு உரிய சட்டம் இயற்ற வேண்டும்.

ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவை அமைக்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்டு, அந்த அமைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து வருகிற ஜூலை மாதம் 10-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. எனவே தமிழக அரசு லோக் ஆயுக்தாவை விரைந்து அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மண்டல அமைப்பு செயலாளர் திருமாறன், மாவட்ட செயலாளர் கருப்புசாமி, மண்டல துணை செயலாளர் கிட்டு, மாவட்ட துணை செயலாளர் வீர.திராவிடமணி, முன்னாள் மாவட்ட செயலாளர் தயா.தமிழன், நகர செயலாளர் கவுதமன், ஒன்றிய செயலாளர் ஆனந்தன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் தயாதமிழன்பன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

Next Story