ஆசிரியர்கள் பொறுப்பு, கடமைகளை உணர்ந்து பணியாற்ற வேண்டும்: துணைவேந்தர் சுப்பையா பேச்சு


ஆசிரியர்கள் பொறுப்பு, கடமைகளை உணர்ந்து பணியாற்ற வேண்டும்: துணைவேந்தர் சுப்பையா பேச்சு
x
தினத்தந்தி 20 April 2018 9:45 PM GMT (Updated: 20 April 2018 8:32 PM GMT)

ஆசிரியர்கள் தங்களது பொறுப்பு, கடமைகளை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் சுப்பையா பேசினார்.

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரியின் 68-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர்(பொறுப்பு) பாலு வரவேற்றார். உதவி பேராசிரியர் அன்புச்செல்வன் ஆண்டறிக்கை வாசித்தார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உயர்கல்வி ஆராய்ச்சி மைய இயக்குனரும், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் கல்வியியல் துறைத்தலைவர் மோகன் சிறப்புரையாற்றினார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பையா தலைமை தாங்கி பேசியதாவது:- கல்வி நிறுவனங்களின் முக்கிய பணி அறிவியல், பண்பில் மற்றும் தன்னம்பிக்கையில் மிகுந்த மாணவர்களை உருவாக்குவதே ஆகும்.

மாணவர்களை உடல் மற்றும் மனரீதியாகவும், வலிமையோடு உணர்ச்சிகளை கட்டுப்படுத்தக் கூடியவர்களாக உருவாக்குவதே ஒவ்வொரு ஆசிரியர்களின் தலையாய கடமையாகும். பாடப்புத்தகங்களை தாண்டி மற்ற சிறந்த புத்தகங்களையும் படித்தவர்கள் எல்லாம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்கள். எனவே மாணவர்கள் நூலகத்தில் அதிக நேரத்தை செலவிட வேண்டும். ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது கல்வி வளர்ச்சியோடு தொடர்புடையதாகும். எனவே சிறந்த மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்களின் கடமையாகும்.

கல்வியின் நோக்கம் நமது கலாசாரம் மற்றும் பண்பாட்டின் பெருமைகளையும், தத்துவங்களையும் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலை முறைக்கு எடுத்துச் செல்வதாகும். ஆசிரியர்கள் அதிகம் படிக்க வேண்டும். அதோடு மாணவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து பிறரின் மனதை அறிந்து கொள்ளக்கூடியவர்களாக இருக்க வேண்டும். மேலும் மாணவர்களின் பிரச்சினைகளை அறிந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஆசிரியர்கள் தமது கடமை மற்றும் பொறுப்புகளை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.

ஒரு மாணவருக்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் சிறப்பாக அமைந்துவிட்டால் அவர் வாழ்க்கையில் முன்னேறுவது உறுதி. மாணவர்களிடம் மறைந்துள்ள திறமைகளை கண்டறிந்து அவர்களின் ஆர்வமுள்ள துறையில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் முனைவர் ஜெயசித்ரா நன்றி கூறினார்.

Next Story