நிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு


நிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு
x
தினத்தந்தி 21 April 2018 4:45 AM IST (Updated: 21 April 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் இருவர் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை கைது செய்வதில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக உள்ளனர்.

விருதுநகர்,

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தென்மண்டல சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி தலைமையில் 9 சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மதுரை, அருப்புக்கோட்டையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த விசாரணையை, உதவி விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சாஜிதாபேகம், கருப்பையா ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.

நேற்று விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாக செயலாளர் ராமசாமி, தலைவர் ஜெயசூர்யா, உதவித்தலைவர் சங்கரலிங்கம் ஆகியோரிடம் போலீசார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதே போன்று மற்ற விசாரணை குழுவினர் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரிக்கு சென்று முதல்வர் பாண்டியராஜன் மற்றும் பேராசிரியர்களிடம் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட 4 மாணவிகளின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளிடம் ரகசிய விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்களிடமும் ரகசிய விசாரணை நடத்தி அவர்கள் தரப்பு தகவல்களை பெற்றுள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பேராசிரியை நிர்மலாதேவி மாவட்ட போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் மாணவிகளிடம் அவர்களை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேச, காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2 உதவி பேராசிரியர்கள் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டுச் சொல்லி இருந்தார்.

அதன்பேரில், பல்கலைக் கழகத்துக்கு விசாரணைக்குச் சென்ற சி.பி.சி.ஐ.டி. குழுவினர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதோடு, நிர்மலாதேவி குறிப்பிட்ட 2 உதவி பேராசிரியர்கள் பற்றி விசாரித்த போது அவர்கள் தலைமறைவாக உள்ளது தெரியவந்தது.

இது பற்றி விசாரணைக்குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது;-

பேராசிரியை நிர்மலாதேவி குறிப்பிட்ட 2 பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களும் தலைமறைவாகி உள்ளதில் இருந்தே அவர்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது உறுதி ஆகி உள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் கிடைத்தவுடன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பேராசிரியை நிர்மலாதேவியை 5 நாள் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கிடைத்துள்ளது. அவர் ஏற்கனவே மாவட்ட போலீஸ் விசாரணையின் போது முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார். அதே போன்று எங்களது விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பார் என கருதுகிறோம். விசாரணையின் போது அவர் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். 

Next Story