கங்கை, காவிரி இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்


கங்கை, காவிரி இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 20 April 2018 10:00 PM GMT (Updated: 2018-04-21T02:06:23+05:30)

கங்கை, காவிரி திட்டத்தை வலியுறுத்தி திருச்செங்கோட்டில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும், என்று விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.

எலச்சிபாளையம், 

குமரி முதல் சென்னை கோட்டை வரை, நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக்கோரியும் தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் நேற்று திருச்செங்கோடு வந்தார். திருச்செங்கோடு மலையடிவாரத்தில் மயிலாசிரமம் பகுதியில் பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

மரபணு மாற்ற விதைகளால் விளைவதை சாப்பிடும் உணவு இளைஞர்களின் ஆண்மையை பாதிக்கும் என்பதாலும் இந்த விதைகளை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு பயணம் நடந்து வருகிறது.

32 மாவட்டங்களிலும் இந்த பயணம் நடக்க உள்ளது. பயணத்தின் முடிவில் முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். அகில பாரத துறவிகள் சங்கத்துடன் இணைந்து இந்திய அளவில் சாமியார்களை திரட்டி கங்கை, காவிரி இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி திருச்செங்கோட்டில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். விவசாயிகள் டெல்லியில் நடத்திய போரட்டத்தின் விளைவாக 29 மாநிலங்களின் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story