நாமக்கல் நகராட்சி ஆய்வாளர் மீது தாக்குதல்: ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


நாமக்கல் நகராட்சி ஆய்வாளர் மீது தாக்குதல்: ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 April 2018 10:15 PM GMT (Updated: 20 April 2018 8:45 PM GMT)

நாமக்கல் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நேற்று நாமக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். இதையொட்டி கட்சி நிர்வாகிகள், பூங்கா சாலையில் விளம்பர பதாகைகளை வைத்து இருந்தனர்.

இந்த பதாகைகள் நகராட்சி அனுமதி பெறாமல் வைக்கப்பட்டு உள்ளதாக கூறி, ஆர்ப்பாட்டம் முடிந்த சற்று நேரத்தில் அங்கு சென்ற நகராட்சி பணியாளர்கள் அவற்றை அப்புறப்படுத்தினர். அப்போது ஒரு விளம்பர பதாகையில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் படம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் திடீரென நகரமைப்பு ஆய்வாளர் முருகேசனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள், ஆய்வாளரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன், ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தாக்குதல் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்ட ஊழியர்கள், நகராட்சி அலுவலக வாயில் முன்பு அமர்ந்து சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இந்த பிரச்சினை தொடர்பாக நகரமைப்பு ஆய்வாளர் முருகேசன், நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஈஸ்வரன், மனோஜ்குமார், அருள், பழனிசாமி, ராஜலிங்கம், சதீஷ், விவேக் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த போராட்டம் காரணமாக நேற்று மாலை நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story