தூங்கி கொண்டிருந்த அக்கா-தங்கையிடம் 4.5 பவுன் சங்கிலி பறிப்பு


தூங்கி கொண்டிருந்த அக்கா-தங்கையிடம் 4.5 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 21 April 2018 4:00 AM IST (Updated: 21 April 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

தூங்கி கொண்டிருந்த அக்கா-தங்கையிடம் 4.5 பவுன் சங்கிலி பறித்துச் சென்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை அருகே தூங்கி கொண்டிருந்த அக்கா-தங்கையிடம் 4½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற டவுசர் கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சையை அடுத்த வல்லம் அருகே உள்ள தங்கப்ப உடையான்பட்டி முதல் தெருவை சேர்ந்தவர் மணிராஜ். விவசாயி. இவருடைய மகள்கள் வினோதா(வயது27), கீர்த்தி(20). இவர்கள் 2 பேரும் நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் மாடியில் உள்ள அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

வீட்டின் பின்புறம் மாமரம் உள்ளது. மேலும் மாடிபடியும் பாதி கட்டிய நிலையில் உள்ளது. நேற்று அதிகாலை 4 மணி அளவில் டவுசர் அணிந்திருந்த 2 மர்மநபர்கள், மாமரத்தின் வழியாக பின்புறமுள்ள மாடிபடிக்கு சென்று அங்கிருந்து மாடிக்கு ஏறினர். அங்கு மாடி அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கே அக்கா, தங்கை தூங்கி கொண்டிருந்ததை பார்த்தனர்.

உடனே மர்மநபர்கள் 2 பேரும், வினோதா கழுத்தில் கிடந்த 2½ பவுன் சங்கிலியையும், கீர்த்தி கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியையும் பறித்தபோது அவர்கள் திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தனர். அருகில் 2 பேர் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருடன்.. திருடன்.. என்று சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு வீட்டின் கீழ் அறையில் படுத்திருந்த மணிராஜ் எழுந்து மாடிக்கு வந்தார்.

ஆனால் அதற்குள் மர்மநபர்கள் 2 பேரும் மாமரத்தின் வழியாக கீழே இறங்கி தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story